மாயமான முகிலனை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க இந்திய அரசுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவு

தினகரன்  தினகரன்
மாயமான முகிலனை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க இந்திய அரசுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவு

ஸ்விட்சர்லாந்து : மாயமான சுற்றுசூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய அரசுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.  சுற்றுசூழல் ஆர்வலர் முகிலன் மாயமான விவகாரம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த ஈரோட்டைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் முகிலன் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி  சென்னையில் ஆவண படம் ஒன்று வெளியிட்டார்.  துப்பாக்கி சூடு குறித்து ஆவணப்படம் வெளியிட்ட மறுநாளே அதாவது பிப்ரவரி மாதம் 15ம் தேதி இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்தவர் திடீரென மாயமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 17ம் தேதி எழும்பூர் ரயில்  நிலைய காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர்- இளையோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி புகார் ஒன்று அளித்தார். அதன்படி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து முகிலன் செல்போன் மற்றும்  சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, முகிலன் சம்பவத்தன்று எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், அவரது செல்போன் சிக்னல் செங்கல்பட்டு வரை இருந்துள்ளது. அதன் பிறகு துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முகிலன் காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையின் போது, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் வழக்கு விசாரணையில், துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்து இருந்தனர். ஆனால் மாயமாகி 4 மாதங்கள்  ஆகியும் முகிலனை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவு இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு ஸ்விட்சர்லாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும்  ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதில் மனித உரிமை விதிமீறல்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று மனித உரிமைகள் கவுன்சிலின் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முகிலன் மாயமானது குறித்து நடத்தப்பட்ட விசாரணை குறித்த விவரங்களை அளிக்குமாறு மனித உரிமைகள் கவுன்சில் கேட்டு கொண்டுள்ளது.முகிலன் சமாதி ஆகிவிட்டதாக சமுக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலை ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்றும் அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டு இருந்தால் அது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்படாமல் இருந்தால் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுசூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் அமைதியான முறையில் பணியாற்றுவதை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை விளக்கம் வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  

மூலக்கதை