2 ஹெல்மெட்கள் வாங்கினால் மட்டுமே இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படும்: மத்திய பிரதேச போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு

தினகரன்  தினகரன்
2 ஹெல்மெட்கள் வாங்கினால் மட்டுமே இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படும்: மத்திய பிரதேச போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு

டெல்லி: இரண்டு புதிய ஹெல்மெட்கள் வாங்கி அதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே இனி இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய முடியும் என  மத்திய பிரதேச போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இரண்டு ஹெல்மெட்கள் கட்டாயம் என்ற விதி கடந்த வியாழன் முதல் மத்திய  பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையர் சைலேந்திர ஸ்ரீவத்சவா கூறுகையில், இரு சக்கர வாகன  ஓட்டுநர் மட்டும் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் என இருவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இரண்டு ஹெல்மெட்கள் வாங்கி அதற்கான  ரசீதை காண்பித்தால் மட்டுமே இனி வாகனப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம் என்றார்.அப்படி ரசீதுகளை காண்பிக்காமல் இருந்தால் கட்டாயம் அந்த வாகனத்தை பதிவு செய்யக்கூடாது என அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும்  ஸ்ரீவத்சவா கூறினார். மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி Bureau of Indian Standards (BIS) விதிகளின்படி தயாரிக்கப்பட்ட, சான்றளிக்கப்பட்ட  ஹெல்மெட்களை மட்டுமே பயன்படுத்த வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே,தமிழகத்தில் கட்டாய  ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை கடந்த 12-ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதத்தை உயர்த்த  பிறப்பித்த அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அபராதம் வசூலிக்கும் அதிகாரம் போக்குவரத்து  எஸ்.ஐ உள்பட அனைத்து எஸ்.ஐ-க்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை