ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்ற தேர்தல்: அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசிக்க மத்திய அரசு முடிவு

தினகரன்  தினகரன்
ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்ற தேர்தல்: அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசிக்க மத்திய அரசு முடிவு

டெல்லி: ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த பிரதமர் மோடி  தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  353 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். இரண்டாவது ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்  தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், ஒரு நாடு, ஒரு தேர்தல் என்கிற அடிப்படையில் ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் ஜூன் 19-ம் தேதி நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில் கலந்து  கொள்ளும்படி அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத் துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி, அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். மக்களவை  மற்றும் மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்வார்கள். இந்தக் கூட்டத்தில் இந்தியாவின்  75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாக  தெரிகிறது.அதேபோல், ஜூன் 20-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை