பாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை

தினமலர்  தினமலர்
பாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை

இஸ்லாமாபாத்: பயத்தை போக்கி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டியை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது நாட்டு அணிக்கு அறிவுரை வழங்கி வெளியிட்ட அறிக்கை: நான் கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கிய போது, வெற்றி பெற 70 சதவீதம் திறமையும்,30 சதவீதம் மன வலிமையும் தேவை என கருதினேன். ஆனால், கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்த போது, இந்த இரண்டும் 50 - 50 என இருந்தால் போதும் என நினைத்தேன். ஆனால்,தற்போது வெற்றிக்கு 60 சதவீத மன வலிமையும், 40 சதவீத திறமைதேவை என்ற கவாஸ்கரின் கூற்றை ஏற்று கொள்கிறேன். இன்று கிடைக்கும் வெற்றியில் மன வலிமை 60 சதவீதம்பங்கு வகிக்கும்.



இரு அணிகளுக்கும் பெரிய அளவில் மன ரீதியான அழுத்தம் இருக்கும். மன வலிமையின் சக்தி தான் முடிவை தீர்மானிக்கும். நமது திறமையான கேப்டன் சர்பராஸ், தனது சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.தோற்றுவிடுவோம் என்ற பயத்தை மனதிலிருந்து நீக்க வேண்டும். தோற்றுவிடுவோம் என்ற பயம், எதிர்மறையான எண்ணத்தை கொடுக்கும். எதிரணியினர் செய்யும் தவறை மறைத்துவிடும். இதுவே பாகிஸ்தான் அணிக்கு நான் அளிக்கும் அறிவுரை.

இன்றைய போட்டியில் வெற்றி பெற, சர்பராஸ், சிறந்த பேட்ஸ்மேன் பவுலர்களை கோண்டு செல்ல வேண்டும். பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். இறுதியாக, தோல்விக்கான பயத்தை நீக்கி, கடைசி பந்து வரை உங்களின் திறமையை வெளிப்படுத்துங்கள். பிறகு, உண்மையான விளையாட்டு வீரர்களாக, முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்று கொள்ளுங்கள். உங்களுக்காக நாட்டு மக்கள் வழிபடுகின்றனர். வாழ்த்துகள். இவ்வாறு அந்த அறிக்கையில் இம்ரான் கான் கூறியுள்ளார்.

மூலக்கதை