ஆஸி., அசத்தல் வெற்றி: பின்ச், ஸ்டார்க் அபாரம்

தினமலர்  தினமலர்
ஆஸி., அசத்தல் வெற்றி: பின்ச், ஸ்டார்க் அபாரம்

லண்டன்: இலங்கைக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய கேப்டன் ஆரோன் பின்ச் சதம் கடந்து கைகொடுத்தார். 'வேகத்தில்' மிரட்டிய ஸ்டார்க், 4 விக்கெட் கைப்பற்றினார்.

இங்கிலாந்தில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டனில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


பின்ச் அபாரம்:

ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பின்ச் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 80 சேர்த்த போது வார்னர் (26) அவுட்டானார். அபாரமாக ஆடிய பின்ச், ஒருநாள் அரங்கில் தனது 14வது சதமடித்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஸ்டீவ் ஸ்மித், அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 173 ரன் சேர்த்த போது பின்ச் (153) அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித் (73) நம்பிக்கை தந்தார். ஷான் மார்ஷ் (3), அலெக்ஸ் கேரி (4), கம்மின்ஸ் (0) ஏமாற்றினர்.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் (46), ஸ்டார்க் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் இசுரு உதானா, தனஞ்செயா டி சில்வா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

கருணாரத்னே ஆறுதல்

கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு கேப்டன் கருணாரத்னே (97), குசால் பெரேரா (52) நல்ல துவக்கம் தந்தனர். குசால் மெண்டிஸ் (30) ஆறுதல் தந்தார். திரிமன்னே (16), மாத்யூஸ் (9), சிறிவர்தனா (3), திசாரா பெரேரா (7), இசுரு உதானா (8), மலிங்கா (1) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

இலங்கை அணி 45.5 ஓவரில், 247 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. தனஞ்செயா டி சில்வா (16) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4, கேன் ரிச்சர்ட்சன் 3, கம்மின்ஸ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

மூலக்கதை