சீன பாதுகாப்பு அமைப்புகளிடம் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத் திருத்தம் நிறுத்திவைப்பு: மக்கள் எதிர்ப்பால் ஹாங்காங் முடிவு

தினகரன்  தினகரன்
சீன பாதுகாப்பு அமைப்புகளிடம் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத் திருத்தம் நிறுத்திவைப்பு: மக்கள் எதிர்ப்பால் ஹாங்காங் முடிவு

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடைபெறும் தீவிர போராட்டம் காரணமாக தங்கள் நாட்டு குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்தத்தை  ஹாங்காக் அரசு நிறுத்தி வைத்துள்ளது.பிரிட்டன் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், கடந்த 1997ல் தாய் நாடான சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்றும் ஹாங்காங் நாட்டில் தனி ஆட்சி இருந்தாலும், சீனாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளை சீன  பாதுகாப்பு அமைப்புகளிடம் ஒப்படைக்கும் சட்ட திருத்தத்திற்கு ஹாங்காங் அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து கடந்த சில நாட்களாக  பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை லட்சக்கணக்கனோர் ஹாங்காங் நகரில் உள்ள பூங்காவில்  திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகள்,  கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இருப்பினும், போராட்டம்  இன்னும் ஓயவில்லை.இதனால், மக்கள் போராட்டத்துக்கு ஹாங்காங் அரசு பணிந்துள்ளது. ஹாங்காங் நகர தலைமை நிர்வாகியும், சீனா ஆதரவு தலைவருமான கேரி லேம்ப் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சீனாவிடம் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்திற்கு  எங்கள் கட்சியின் கூட்டணியினர் மற்றும் ஆலோசகர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக, இந்த சட்ட திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். ஆனால்,  வாபஸ் பெற மாட்டோம்.  இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்,’’ என்றார்.இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து ஹாங்காங்கில் இன்றும் பிரமாண்ட போராட்டம் நடத்த எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டு இருப்பதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. ‘சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக வாபஸ் பெற வேண்டும். அது  வரை போராட்டம் தொடரும்’ என போராடடக் குழுவினர் எச்சரித்துள்ளனர்.

மூலக்கதை