தென் ஆப்ரிக்கா முதல் வெற்றி: சுழலில் மிரட்டிய இம்ரான் தாகிர்

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்கா முதல் வெற்றி: சுழலில் மிரட்டிய இம்ரான் தாகிர்

கார்டிப்: உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா முதல் வெற்றி பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடர் லீக் போட்டியில் நேற்று தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.

தாகிர் அபாரம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரத்துல்லா, நுார் அலி துவக்கம் கொடுத்தனர். ரபாடா வேகத்தில் ஹஸ்ரத்துல்லா (22) சிக்கினார். ரஹ்மத் (6), கிறிஸ் மோரிசிடம் வீழ்ந்தார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. 52 நிமிட தாமதத்துக்குப் பின் தலா 48 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி துவங்கியது. ஷாகிதி (8), பெலுக்வாயோவிடம் வீழ்ந்தார்.


அடுத்து வந்த இம்ரான் தாகிர், நுார் அலி (32), அஸ்கரை (0) ஒரே ஓவரில் அவுட்டாக்கினார். முகமது நபியை (1) ஏமாற்றினார். குல்பதின் (5), தாகிரிடம் சரிந்தார். இக்ரம் 9 ரன் எடுத்தார். பவுண்டரி மழை பொழிந்த ரஷித் கான் 35 ரன்னுக்கு தாகிர் 'சுழலில்' வீழ்ந்தார். ஆப்கானிஸ்தான் அணி 34.1 ஓவரில் 125 ரன்னுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா சார்பில் இம்ரான் தாகிர் அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.

எளிய இலக்கு

'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி மாற்றப்பட்ட இலக்கைத் (48 ஓவரில் 127 ரன்) துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, குயின்டன் டி காக் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. குயின்டன் 23வது அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த போது குயின்டன் (68) அவுட்டானார்.தென் ஆப்ரிக்க அணி 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 28.4 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஆம்லா (41), பெலுக்வாயோ (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை