கேரளாவில் பயங்கரம் பெண் ஏட்டு பட்டப்பகலில் நடுரோட்டில் எரித்து கொலை: போக்குவரத்து போலீஸ்காரர் கைது

தினகரன்  தினகரன்
கேரளாவில் பயங்கரம் பெண் ஏட்டு பட்டப்பகலில் நடுரோட்டில் எரித்து கொலை: போக்குவரத்து போலீஸ்காரர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மாவேலிக்கரை அருகே நடுரோட்டில் பெண் போலீஸ் ஏட்டை போக்குவரத்து போலீஸ்காரர் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆலப்புழா   மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள காஞ்ஞிப்புழா பகுதியைச் சேர்ந்தவர்  சவுமியா புஷ்பாகரன்(33). வள்ளிகுந்நம் போலீஸ்  நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வந்தார். இவரது கணவர் சஜீவ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உண்டு. போலீஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் இவர்களது வீடு உள்ளது.இந்நிலையில் நேற்று பகல் 2.30 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு சென்ற சவுமியா, பின்னர் பொருட்கள் வாங்க 3.30 மணிக்கு ஸ்கூட்டரில் கடைக்கு சென்றார்.  அப்போது காரில் வந்த ஒரு வாலிபர் சவுமியாவின் ஸ்கூட்டர் மீது மோதினார். இதில் சவுமியா தடுமாறி கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய வாலிபர் கத்தியால் சவுமியாவை சரமாரியாக குத்தினார். சவுமியா தப்பி ஓட முயல்வதற்குள் அவர் மீது ெபட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் சம்பவ இடத்தில் சவுமியா உடல் கருகி இறந்தார்.  வாலிபருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அருகில் யாரும் செல்ல முடியவில்லை. அந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இது குறித்து வள்ளிகுந்நம் போலீசிற்கு தகவல் அளிக்கப்பட்டது. வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் போக்குவரத்து போலீஸ்காரர் அஜாஸ் என்றும், ஆலுவாவில் பணியாற்றுவதும் தெரியவந்தது. தீக்காயம் இருந்ததால் அஜாஸ் ஆலப்புழா அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அஜாசிற்கும் சவுமியாவிற்கும் நெருக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் சவுமியாவை அஜாஸ் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

மூலக்கதை