முதல்வர் மம்தாவுக்கு டாக்டர்கள் நிபந்தனை மன்னிப்பு கேட்காவிட்டால் ஸ்டிரைக் தொடரும்: சமரச பேச்சுக்கான அழைப்பும் நிராகரிப்பு

தினகரன்  தினகரன்
முதல்வர் மம்தாவுக்கு டாக்டர்கள் நிபந்தனை மன்னிப்பு கேட்காவிட்டால் ஸ்டிரைக் தொடரும்: சமரச பேச்சுக்கான அழைப்பும் நிராகரிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இளநிலை டாக்டர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று 5வது நாளாக நீடித்தது.  மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நோயாளி ஒருவர் சமீபத்தில் இறந்தார். ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் அங்கு பணியில் இருந்த இளநிலை டாக்டர்கள் இருவரை கடந்த 11ம் தேதி சரமாரியாக தாக்கினர். இதில் டாக்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி இளநிலை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5வது நாளாக போராட்டம் நீடித்தது.  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாத டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி சில தினங்களுக்கு முன் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு நேரில் சென்று எச்சரித்தார்.  ‘மிரட்டும் தொனியில் பேசிய மம்தா பானர்ஜி, மன்னிப்பு கேட்காவிட்டால் நாங்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வோம்’ என டாக்டர்கள் கூறினர். அதன்படி மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் ராஜினாமா செய்தனர். இதனால், மம்தா அதிர்ச்சி அடைந்துள்ளார்.இந்நிலையில், இந்த போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தைக்கு வரும்படி இளநிலை டாக்டர்களுக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இது குறித்து இளநிலை டாக்டர்கள் அமைப்பினர் செய்தி தொடர்பாளர் அரிந்தம் தத்தா கூறுகையில், ‘‘ நாங்கள் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த செல்லவில்லை. அவர் முதலில் நீல் ரத்தன் சிர்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து அவர் தெரிவித்த கருத்துகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், போராட்டம் தொடரும்,’’ என்றார். இதற்கிடையே டாக்டர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுமெனவும் மம்தா நேற்றிரவு அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர்களுக்கு வர்தன் கடிதம்நோயாளிகளின் உறவினர்கள் டாக்டர்களை தாக்கும் வன்முறையை தடுக்க சட்டம் இயற்றுவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன் டாக்டர்களை காக்கவும், மருத்துவமனைகளின் சொத்துக்களை காக்கும் வகையில் இந்திய மருத்துவ சங்கம் அளித்துள்ள வரைவு சட்டத்தின் நகலையும் அவர் இணைத்துள்ளார். டாக்டர்களை பாதுகாக்க சட்டம் இயற்றுவது குறித்து இந்திய மருத்துவ சங்கம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை அளிக்க மத்திய அரசு உத்தரவுமேற்கு வங்கத்தில் நடக்கும் டாக்டர்கள் போராட்டம், அரசியல் வன்முறை குறித்து தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்யும்படி இம்மாநில அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் 2 கடிதங்களை அனுப்பியுள்ளது.டெல்லி டாக்டர்கள் கெடுபோராட்டம் நடத்தும் மேற்கு வங்க டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, மம்தா பானர்ஜிக்கு டெல்லியைச் சேர்ந்த டாக்டர்கள் 48 மணி நேர கெடு விதித்துள்ளனர். இல்லையென்றால், காலவரையற்ற போராட்டம் தொடரப் போவதாக எச்சரித்துள்ளனர். டெல்லி மருத்துவமனைகளில் பணியாற்றும் பல டாக்டர்கள் நேற்று வேலையை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மூலக்கதை