நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி: ‘மேட்ச்’ தடைப்பட்டால் ரூ137.5 கோடி ‘அவுட்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை இந்தியா  பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி: ‘மேட்ச்’ தடைப்பட்டால் ரூ137.5 கோடி ‘அவுட்’

மான்செஸ்டர்:  நாளை நடக்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, ஒருவேளை மழையால் தடைபட்டால், ரூ137. 5 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மழை பெய்யக் கூடாது என்று, விளம்பர நிறுவனங்கள் பிரார்த்தனை செய்கின்றன.

போட்டிக்கான ‘கவுன்ட்டவுன்’ துவங்கியதால் இரு அணி வீரர்களும் குஷியாக உள்ளனர். 2019ம் ஆண்டு ஐ. சி. சி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் பல போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் 4 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.

ஆனால் வலுவான அணிகளின் போட்டிகள் இன்னும் உள்ளன. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை (ஜூன் 16) மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்திய நேரபடி மாலை 3 மணிக்கு நடக்க உள்ளது.

உலகிலேயே மிகவும் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் போட்டி என்பதால், இரு அணிகளும் மோதும் ‘கவுன்ட்டவுன்’ துவங்கியது என்று வர்ணனையாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சில ஆட்டம் ரத்தாகி வருவதால், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் மழையின் காரணமாக பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது.

உலக கோப்பை தொடர் தொடங்கிய முதல் 15 நாட்களில் 18 போட்டிகள் நடந்து முடிந்திருக்க வேண்டும். ஆனால் 14 போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன.

மீதமுள்ள நான்கு போட்டிகள் மழையின் காரணமாக பாதித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு நான்கு போட்டிக்கும் இடையே மழையின் குறுக்கீடு இருந்துள்ளது.

இதுவரை மூன்று போட்டிகளில் ஒரு பந்துக் கூட வீசப்பட வில்லை. ஒரு போட்டி ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் எந்தவித முடிவும் எட்டப்படாமல் ஆட்டம் தடையானது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் 50 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. சரி, நாளை மோதவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது, மழை வந்து ஆட்டத்தை கெடுக்குமா அல்லது பல ஆண்டுகளுக்கு இரு அணிகள் விளையாட்டை ரசிகர்கள் பார்ப்பார்களா என்பதைதான்.



இதுவரை எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியா எட்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 3 போட்டிகளில் வெற்றியும், பாகிஸ்தானும் எட்டு போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

வானிலை ஆய்வு மையம் கருத்துப்படி, நாளை இங்கிலாந்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனால், போட்டி பாதிக்கப்படலாம்.

போட்டி நடைபெற உள்ள மான்செஸ்டரில் மேகமூட்டமான வானிலை இருக்கும். காலை 6 முதல் 8 மணி வரை லேசான மழை பெய்யும்.

பின்னர் 8 மணி முதல் மதியம் 2 மணி வரை சூரியன் தென்படும். பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை லேசான மழை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.



மழையால் ஒருவேளை போட்டி தடைபடுமானால், ரூ137. 5 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, நேரடி ஒளிபரப்பு உரிமம், 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விளம்பரம் உள்ளிட்ட வகையிலான அனைத்து வருவாய்க்கும் செம அடி விழும்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கும் போது, 5,500 வினாடிகள் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. சாதாரணமாக மற்ற அணிகள் விளையாடும் போது வினாடிக்கு 1. 6 லட்சம் முதல் 1. 8 லட்சம் ரூபாய் வரை விளம்பர கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

ஆனால், நாளைய போட்டியில் வினாடிக்கு 2. 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளதால், ‘போட்டி நடக்க வேண்டும்’ எனக்கூறும் நிறுவனங்கள் ‘மழை பெய்யக்கூடாது’ என்று பிரார்த்தித்து வருகின்றன.

உலககோப்பை தொடரை பொருத்த வரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 6 முறை மோதியுள்ளன.

அதில் அனைத்து போட்டியிலும் இந்தியா வென்றுள்ளது. தற்போது நடக்க உள்ள உலகக் கோப்பை போட்டில் இந்தியா வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள்தான் அதிகம் என்றாலும், பாகிஸ்தானுக்கு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது தான்.

அதே மனநிலையில் நாளைய போட்டியை பாகிஸ்தான் எதிர்கொள்ள உள்ளது.


நம்பர் ஒன் பவுலர் பும்ரா

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் கூறியதாவது: தற்போதைய இந்திய அணி மிகவும் அபாரமான திறன் கொண்டது. பாகிஸ்தானை பலமுறை வெல்லும் திறன் உள்ளது.

இந்தியன் என்பதால் நான் இதை கூறவில்லை. நான் ஆடிய காலத்தில் பாகிஸ்தான் அணி சிறப்பாக இருந்தது.

ஆனால் தற்போது இரு அணிகளும் 10 முறை ஆடினால் 7 முறை இந்தியா வென்றுவிடும். பும்ரா உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார்.

விராட் கோலி நம்பர் ஒன் பேட்ஸ்மேன். அவரது தலைமையையும், எனது தலைமையையும் ஒப்பிட முடியாது.

தோனி ராணுவ அடையாளம் பதித்த கையுறைகளை அணிந்ததில் தவறு எதுவும் இல்லை. நாடு, ராணுவத்தினர் மீதான அபிமானத்தால் அவர் அந்த கையுறைகளை அணிந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோஹ்லி, சர்மாவுக்கு குறி

இந்திய அணியின் கிரிக்கெட் ‘கடவுள்’ சச்சின் கூறியதாவது: பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஆமிருக்கு எதிராக இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய வேண்டும்.

ஷாட் பால்கள் கிடைத்தால் அவற்றை வலுவாக எல்லைக்கோட்டுக்கு அனுப்ப வேண்டும். அனைத்து அம்சங்களிலும் இந்தியா ஆக்ரோஷமாக இருக்க வேண்டும்.

நாம் நம்பிக்கையுடன் காணப்பட்டால், பந்துவீச்சாளருக்கு குழப்பம் உண்டாகும். அனுபவம் வாய்ந்த விராட் கோஹ்லி, ரோஹித் சர்மாவை துரிதமாக அவுட்டாக பாகிஸ்தான் அணி முயற்சிக்கும்.

ஆமிர், வஹாப் ரியாஸ், அவர்களது விக்கெட்டை வீழ்த்த போராடுவர். எனவே இந்திய அணி விழிப்புடன் இருக்க வேண்டும்.



விரக்தியான பாக். ரசிகர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பாகிஸ்தான்.

வார்னர் மற்றும் பின்ச்சின் அதிரடியான ஆட்டத்துக்கு பின்பு ஆட்டத்தை பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் ஆமிர் கொண்டு வந்தார். 10 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் பேட்டிங்கின் போது 136/2 என்ற நிலையிலிருந்து அடுத்த 11 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் பாகிஸ்தானின் மோசமான செயல்பாட்டை கண்ட பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் விரக்தியோடு முகத்தை திருப்பி கொண்டார்.

இந்த காட்சி இணையத்தில் வைரலானது. இதனை ஐசிசி டுவிட்டர் பக்கமே பகிர்ந்திருந்தது.

பாகிஸ்தானின் பேட்டிங் சரிவால் விரக்தியில் அந்த ரசிகர் அப்படி செய்துள்ளார்.

இதனை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்தனர்.

.

மூலக்கதை