8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி: ஜோ ரூட் அசத்தல்

தினகரன்  தினகரன்
8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி: ஜோ ரூட் அசத்தல்

சவுத்தாம்ப்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த உலக கோப்பை லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்களாக கிறிஸ் கேல், லூயிஸ் களமிறங்கினர். வோக்ஸ், ஆர்ச்சரின் துல்லியமான  பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் திணறினர். லூயிஸ் 2 ரன் மட்டுமே எடுத்து வோக்ஸ் வேகத்தில் கிளீன் போல்டானார். வோக்ஸ் 2 மெய்டன் ஓவர்களை வீசி அசத்த, வெஸ்ட் இண்டீஸ் 5 ஓவர் முடிவில் 8 ரன் மட்டுமே எடுத்து 1  விக்கெட்டையும் இழந்து தவித்தது.வழக்கத்தைவிட பொறுமையாக விளையாடிய கேல் 36 ரன் (41 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பூரன் - ஹெட்மயர் இணை 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 89  ரன் சேர்த்தது. ஹெட்மயர் 39 ரன், கேப்டன் ஹோல்டர் 9 ரன் எடுத்து ஜோ ரூட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடி வீரர் ரஸ்ஸல் 21 ரன் எடுக்க, நிகோலஸ் பூரன் 63 ரன் (78 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து வெளியேறினார். பிராத்வெயிட் 14 ரன் எடுக்க... காட்ரெல், கேப்ரியல் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4  ஓவரிலேயே 212 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து பந்துவீச்சில் ஆர்ச்சர், வுட் தலா 3, ரூட் 2, வோக்ஸ், பிளங்கெட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து 50 ஓவரில் 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோ - ஜோ ரூட் ஜோடி 14.3 ஓவரில் 95 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது. பேர்ஸ்டோ 45 ரன் எடுத்து (46 பந்து, 7  பவுண்டரி) கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ரூட் - வோக்ஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்தது. வோக்ஸ் 40 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.இங்கிலாந்து அணி 33.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ரூட் 100 ரன் (94 பந்து, 11 பவுண்டரி), ஸ்டோக்ஸ் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆல் ரவுண்டராக ஜொலித்த ஜோ ரூட் ஆட்ட  நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

மூலக்கதை