மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு மோடி கட்டுப்பாடு: 5 ஆண்டு பணிகள் குறித்து 100 நாட்களில் அறிக்கை தர உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு மோடி கட்டுப்பாடு: 5 ஆண்டு பணிகள் குறித்து 100 நாட்களில் அறிக்கை தர உத்தரவு

புதுடெல்லி: மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கள் வீட்டிலிருந்து அரசுப் பணியை செய்யாதீர் என்பது உள்பட பல அதிரடி கட்டுப்பாடுகளை பிரதமர் மோடி விதித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் 303 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக பாஜ உருவெடுத்தது.

2வது முறையாக மோடி ஆட்சியை கைப்பற்றியுள்ளார். அவரது தலைமையில் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

அதில் கூட்டணிக் கட்சியினருக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு மட்டும் உள் கட்சி மோதலால் பதவி வழங்கப்படவில்லை.

இந்த முறை பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர மக்களவையின் 8 குழுவிலும் அமித்ஷாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் நேற்று மாலையில் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை நீடிப்பது, முத்தலாக் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, ஆதார் சட்ட திருத்த மசோதா, மருத்துவ கவுன்சில் நிர்வாகக் குழு தொடர்பான சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 57 அமைச்சர்கள் கலந்து கொண்ட அமைச்சரவையின் முதல் கூட்டம் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அமைச்சர்கள் அனைவரும் அலுவலகங்களுக்குச் சரியான நேரத்தில், காலை 9. 30 மணிக்கு வர வேண்டும்.

வீட்டில் இருந்து பணி செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். டெல்லியில் இருக்கும்போது கண்டிப்பாக அலுவலகம் வரவேண்டும்.

மற்றவர்களுக்கு அமைச்சர்கள் உதாரணமாக பணியாற்றுங்கள். புதிய பணிகள் குறித்து துறை ரீதியிலான அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டும்.

அப்போதுதான் ஆக்கபூர்வமான பணிகள் நடைபெறும். கோப்புகளைத் தேங்க விடக்கூடாது.
 
தனது துறை சார்ந்த சமீபத்திய வளர்ச்சி திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்க தினமும் நேரம் ஒதுக்க வேண்டும்.

மேலும் முதல் 100 நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையையும் தயார் செய்து ஒப்படைக்க வேண்டும். பார்லி. , கூட்டத்தொடர் நடைபெறும் 40 நாட்களும் எந்த அமைச்சரும் வேறு இடங்களுக்கு பயணம் செலவதை தவிர்க்க வேண்டும் மாநிலங்களில் இருந்து வரும் இணை அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஆவணங்களை அமைச்சர்கள் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அமைச்சர்கள் அனைவரும் தங்களது தொகுதி மக்களைச் சந்திப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

இதில் அமைச்சர்கள், எம்பிக்கள் என்று எந்தப்பாகுபாடும் கிடையாது. இவ்வாறு பிரதமர் மோடி அமைச்சர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.


.

மூலக்கதை