அரபிக்கடலில் மையம் கொண்டு திடீரென திசை திரும்பியதால் வாயு புயல் குஜராத்தை தாக்காது

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரபிக்கடலில் மையம் கொண்டு திடீரென திசை திரும்பியதால் வாயு புயல் குஜராத்தை தாக்காது

* இன்று பிற்பகல் 180 கி. மீ வேகத்தில் கரையை கடக்கிறது
* கடலோர மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு
* 110 ரயில்கள் ரத்து; 5 விமான நிலையம், துறைமுகம் மூடல்

ேபார்பந்தர்: ‘வாயு’ புயல் இன்று பிற்பகல் துவாரகா- போர்பந்தர் இடையே கரையை கடக்கவுள்ளதால், குஜராத்தில் கடலோர மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயலின் திசை இன்று அதிகாலை மாறியதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இருந்தும், 24 மணி நேரத்திற்கு 110 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்கள், துறைமுகம் ஆகியன மூடப்பட்டுள்ளன.

அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘வாயு’ புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் மாநிலத்தை நேற்றிரவு முதல் வேகமாக நெருங்கிக் கொண்டுள்ளது. இந்தப் புயலின் பாதை சற்றே மாறியிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், குஜராத்தின் தெற்கு பகுதியில் உள்ள வேரவல் மற்றும் மேற்கில் உள்ள துவாரகா இடையே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது.

அப்போது 155 முதல் 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டரை எட்ட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கரையை கடந்த பின்னர் சவுராஷ்டிரா, கட்ச் கரையோரம் ‘வாயு’ புயல் பயணிக்க வாய்ப்புள்ளது.

இதையடுத்து புயல் பாதிப்புகளை இயன்ற வரை தவிர்க்க குஜராத் அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயலால் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளிலிருந்து  500 கடலோர கிராமங்களில் வசித்த 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கட்ச், மார்பி, ஜாம்நகர், ஜுனாகத், தேவ் பூமி - துவாரகா, போர்பந்தர்,  ராஜ்கோட், அம்ரேலி, பாவ்நகர், கிர் சோம்நாத் ஆகிய மாவட்டங்களில் இருந்து  புயல் பாதிப்பு ஏற்படாத பகுதிகளுக்கு மக்கள் மாற்றப்பட்டுள்ளதாக,  அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி  தெரிவித்தார். பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மேற்கூறிய 10  மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்றும், இன்றும், நாளையும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல்படை, கடற்படை மற்றும் விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விமானங்களும், ஹெலிகாப்டர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

குஜராத்தில் உள்ள ஐந்து விமான நிலையங்களில் நேற்று நள்ளிரவு முதல் 24 மணி நேரத்திற்கு போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக போர்பந்தர், காந்திதாம், பாவ்நகர், புஜ் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு செல்லும் 110 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் முக்கிய துறைமுகமான காண்ட்லா துறைமுகம் மூடப்பட்டுள்ளது.

சவுராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 36 பிரிவுகள் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. படகுகள், மரம் அறுக்கும் கருவிகள், நவீன தொலைத்தொடர்பு சாதனங்களுடன் இவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் திரும்ப வரவழைக்கப்பட்டுள்ளனர். ‘வாயு’ புயலால் பாதிக்கப்படக் கூடியவர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திப்பதாக டிவிட்டரில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ‘வாயு’ புயல் காரணமாக மகாராஷ்ட்ராவில் நேற்றிரவு பல இடங்களில் பலத்த காற்று வீசியது. அப்போது சர்ச்கேட் ரயில் நிலையத்தில் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டு பயணிகள் மேல் விழுந்ததில், 3 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.



அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். பலத்த காற்று வீசுவதால் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர், டையூ, பாவாநகர், கேஷோத் மற்றும் கண்டலா ஆகிய நகரங்களில் சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து கிடக்கின்றன.

அனைத்து போக்குவரத்தும் மேற்கண்ட பகுதிகளுக்கு துண்டிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அகமதாபாத் ஐஎம்டி வானிலை ஆராய்ச்சியாளர் மனோரமா மொகன்தி கூறுகையில், ‘‘வாயு புயல், நள்ளிரவு முதல் திசை திரும்பியதால் குஜராத் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தாது.

வேரவல், போர்பந்தர், துவாரகா போன்ற கடலோர பகுதிகளில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தி கடற்கரையொட்டி கடந்து செல்லும். இன்று பிற்பகலில் புயல் கடையை கடக்கும்.

அப்போது, மணிக்கு 165 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகத்துடன் பலத்த மழை பெய்யும்’’ என்றார்.

வாயு புயல் ‘ஹிட்ஸ்’
* 10  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
* மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு
* மகாராஷ்ட்ராவில் பெய்த மழையால் ஒருவர் உயிரிழந்தார்
* 5 விமான நிலையம், காண்ட்லா துறைமுகம் மூடல், 110 ரயில்கள் ரத்து
* 500 கடலோர கிராமங்களில் வசித்த 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்

.

மூலக்கதை