டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், ஜூன் 24ம் தேதி கூடுகிறது

தினகரன்  தினகரன்
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், ஜூன் 24ம் தேதி கூடுகிறது

டெல்லி : டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், ஜூன் 24ம் தேதி கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதை கண்காணிக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும், அதோடு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு கடந்தாண்டு அமைத்தது. இந்த 2 அமைப்புகளிலும் நான்கு மாநிலங்களும் தங்கள் சார்பாக தலா ஒரு பிரதிநிதியை நியமித்துள்ளன. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து, இதுவரையில் 3 முறை கூடி இருக்கிறது. 9.19 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு தர உத்தரவு கடைசியாக கடந்த மே 28ம் தேதி இதன் கூட்டம் நடந்தது. அப்போது ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் பிறப்பித்த உத்தரவில், ‘‘உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், ஜூன் மாதத்துக்கான 9.19 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இதில், முகாந்திரம் இல்லாத எந்த காரணங்களையும் ஏற்க முடியாது. மேலும், நீர் திறப்பு குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை, அனைத்து மாநிலங்களும் அடுத்த கூட்டத்தின்போது ஆணையத்திடம் கொடுக்க வேண்டும்,’’ என தெரிவித்தார். இந்த உத்தரவை ஏற்று, தனது அணைகளில் இருந்து கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட்டு இருந்தால் , ஜூன் மாதம் முதல் வார இறுதியில் தமிழகத்திற்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஜூன் 24ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்ஆனால் கர்நாடக அரசு நீரை திறக்கவில்லை. இதனிடையே கர்நாடக நீர் திறக்காதது குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், ஜூன் 24ம் தேதி கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகளுக்கு காவிரி ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளனர். அப்போது ஜூலை மாதத்திற்கான  30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என தமிழக அரசு ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதம் தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஜூன் தொடக்கத்தில் 4.5 டிஎம்சி நீர் வர வேண்டிய நிலையில் 1 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

மூலக்கதை