சாதனை படைப்பாரா கோஹ்லி?

தினமலர்  தினமலர்
சாதனை படைப்பாரா கோஹ்லி?

நாட்டிங்காம் : இன்று (ஜூன் 13) நடைபெறும் இந்தியா- நியூசிலாந்து இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 11,000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி தொடரில் நாட்டிங்காம் நகரில் நடக்கும் இன்றைய போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகள் பெற்று, அதிக புள்ளிகள் பெற்றுள்ள அணிகளின் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் 3 வது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால், ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும்.

சாதனை படைப்பாரா கோஹ்லி :


இதுவரை 221 போட்டிகளில் விளையாடி உள்ள கோஹ்லி, 10943 ரன்கள் அடித்துள்ளார். வேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி ஏற்கனவே பெற்று விட்டார். இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் 57 ரன்கள் எடுத்தால் அதிவேகமாக 11,000 ரன்களை கடந்த 3வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெறுவார்.
இதற்கு முன் இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகிய 2 பேர் மட்டுமே விரைவாக 11,000 ரன்களை கடந்த இந்திய பேட்ஸ்மேன்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் இந்திய அணியின் கேப்டன்களாக இருந்த போதே இந்த சாதனையை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்களாக இந்தியாவின் விரேந்திர சேவாக் மற்றும் ஆஸி.,யின் ரிக்கி பாண்டிங் ஆகியோர் உள்ளனர். இவர்கள் நியூசிலாந்திற்கு எதிராக இதுவரை 6 சதங்களை விளாசி உள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கோஹ்லி 5 இடத்தில் உள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் இந்த சாதனையையும் கோஹ்லி நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை