விபத்துக்குள்ளான ஏ.என்.32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவிப்பு!

தினகரன்  தினகரன்
விபத்துக்குள்ளான ஏ.என்.32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவிப்பு!

சியாங்: அருணாச்சல பிரதேச வனப்பகுதியில் விபத்துக்குள்ளான ஏ.என்.32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்தததில் ஒருவர் கூட பிழைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அசாம் மாநிலத்தின் ஜோர்ஹத் பகுதியில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-32 என்ற விமானம் கடந்த ஜூன் 3ம் தேதி பகல் 12.27 மணிக்கு புறப்பட்டு சென்றது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேன்சுக்கா என்ற ராணுவ தளத்துக்கு சென்ற இந்த விமானத்தில் மொத்தம் 13 பேர் பயணித்தனர். இந்த நிலையில், விமானம் புறப்பட்டு சென்ற 35 நிமிடத்துக்கு பின்னர் விமான கட்டுப்பாடு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டது. அப்போது, மாயமான இந்திய விமானப் படை விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தின் டாடோ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் விமானம் குறித்த தகவல்கள் தெரியவில்லை. இதையடுத்து, சுகோய் 30 மற்றும் C-130J ஹெர்குலஸ் ரக விமானப்படை விமானங்கள் உதவியுடன் மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மோசமான வானிலை காரணமாக காணாமல் போன விமானத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. 8 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு, நேற்று முன் தினம் அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சிதைந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய விமானப்படை சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இந்திய விமானப்படையின் எம்.ஐ -17 ரக ஹெலிகாப்டரில் இருந்து விமானம் சிதைந்து கிடக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. விமானம் விபத்துக்குள்ளான பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால், மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தரையிறக்கப்பட்டனர். இவர்களுடன் தரைப்படை வீரர்களும் இணைந்து தடுத்தல்மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், விமானத்தில் பயணித்த 8 விமானிகள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பெரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 13 பேரும் உயிரிழந்து விட்டதாக அவர்களது குடும்பத்தாருக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

மூலக்கதை