பேருந்துகள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களை இயக்க கல்வித்தகுதி தேவையில்லை என மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்

தினகரன்  தினகரன்
பேருந்துகள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களை இயக்க கல்வித்தகுதி தேவையில்லை என மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்

புதுடெல்லி: பேருந்துகள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு எந்தவித குறைந்தபட்ச கல்வித்தகுதியும் தேவையில்லை என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பேருந்து, லாரி போன்றவை கனரக வாகனங்கள் ஆகும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்னரே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989, எட்டாவது விதியின்படி கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்தது 8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஆனால், சொந்த பயன்பாட்டுக்காக வாகனம் ஓட்டுபவர், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவை இல்லை. ஆனால், படிப்பறிவு அற்றவர் பலர் ஓட்டுனர் பணியில் இருப்பதாலும், அவர்கள் உரிமம் பெறுவதில் சிக்கல் இருப்பதால், ஓட்டுனர் பற்றாக்குறை நீடிப்பதாக வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் பல காலங்களாக கூறி வருகின்றனர். ஆனால், அரசு இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமலே இருந்து வந்தது. இதற்கிடையில், மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த முடிவை மத்திய அரசு மாற்றிக்கொள்ள திட்டமிட்டு, கல்வித் தகுதியை நீக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், விபத்துகளுக்கும் படிப்பின்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், விபத்துகளை ஏற்படுத்துவோர் கல்வி அறிவு அற்றவர்கள் என்பதற்கான எந்த உறுதியான ஆதாரமும் இல்லை எனவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை