என்இஎப்டி, ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை கட்டணம் ரத்து அடுத்த மாதம் அமல்

தினகரன்  தினகரன்
என்இஎப்டி, ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை கட்டணம் ரத்து அடுத்த மாதம் அமல்

மும்பை: வங்கி கணக்கில் இருந்து என்இஎப்டி, ஆர்டிஜிஎஸ் முறையில் பணம் அனுப்புவதற்கான கட்டண ரத்து அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்கில் இருந்து வேறாருவரின் கணக்கிற்கு ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி மூலம் பணம் அனுப்பப்படுகின்றன. இவற்றுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. உதாரணமாக என்இஎப்டி பரிவர்த்தனைக்கு 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையிலும், ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைக்கு 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுகிறது.  என்இஎப்டியில் பணம் அனுப்பினால் சில மணி நேரங்களில் அல்லது அடுத்த நாள் சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். ஆனால், ஆர்டிஜிஎஸ் முறையில் உடனடியாக பணம் சென்று சேர்ந்து விடும். கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை மற்றும் உத்திகளில் ஒன்றாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் அடிப்படையில்தான் கார்டு பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டன. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு  பீம் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த சூழ்நிலையில், கடந்த 6ம் தேதி நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை சமர்ப்பித்த ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை ரத்து செய்வதாக  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த கட்டண ரத்து அறிவிப்பு ஜூலை 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள் கட்டண குறைப்பை அமல்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு இந்த பலன் கிடைக்கச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

மூலக்கதை