நீரவ் மோடி ஜாமீன் மனு 4ம் முறையாக நிராகரிப்பு: இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி

தினகரன்  தினகரன்
நீரவ் மோடி ஜாமீன் மனு 4ம் முறையாக நிராகரிப்பு: இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி

லண்டன்: நிதி மோசடி வழக்கில் நாட்டை விட்டு தப்பியோடி லண்டனில் தஞ்சமடைந்துள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் 4ம் முறையாக நிராகரித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு ஏமாற்றிய வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி வெளிநாட்டில் தஞ்சமடைந்து உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை,  வருமான வரித் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக சுற்றி திரிவது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் 19ம் தேதி கைது செய்யப்பட்ட அவர், அங்குள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  தற்போது அவர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ஜாமீன் கோரி நீரவ் மோடி மூன்று முறை தொடர்ந்து தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமீன் கோரி இங்கிலாந்து ராயல் நீதிமன்றத்தில் 4ம் முறையாக நேற்று அவர் ஆஜரானார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி இன்கிரிட் சிம்லெர், ``நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் அவர் மீண்டும் ஆஜராகாமல்  இருக்க அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதனால்தான், ஏற்கனவே மூன்று முறை அவரது ஜாமீன் மனுவை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது தவிர அவர் சாட்சியங்களை அழிக்கவும், நீதித்துறை நடவடிக்கைக்கு  இடையூறு விளைவிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது.\'\' என்று உத்தரவு பிறப்பித்தார்.

மூலக்கதை