வார்னர் சதம்: ஆஸி., அசத்தல் வெற்றி!

தினமலர்  தினமலர்
வார்னர் சதம்: ஆஸி., அசத்தல் வெற்றி!

டான்டன்: உலக கோப்பை லீக் போட்டியில் டேவிட் வார்னர் சதம் கடந்து கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் போராட்டம் வீணானது.

இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டான்டனில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

நல்ல துவக்கம்:

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஹபீஸ் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த பின்ச், அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 146 ரன் சேர்த்த போது ஆமிர் 'வேகத்தில்' பின்ச் (82) வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20) நிலைக்கவில்லை.

ஷஹீன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய வார்னர் (107), ஒருநாள் அரங்கில் தனது 15வது சதத்தை பதிவு செய்தார். ஆமிர் 'வேகத்தில்' உஸ்மான் கவாஜா (18), ஷான் மார்ஷ் (23) வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில், 307 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமிர், 5 விக்கெட் கைப்பற்றினார்.

இமாம் ஆறுதல்:


கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் (0) மோசமான துவக்கம் தந்தார். பாபர் ஆஸம் (30) ஆறுதல் தந்தார். கூல்டர்-நைல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இமாம்-உல்-ஹக் (53), அரைசதம் கடந்தார். பின்ச் 'சுழலில்' ஹபீஸ் (46) சிக்கினார். ரிச்சர்ட்சன் ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்த ஹசன் அலி (32) ஓரளவு கைகொடுத்தார். பின் கேப்டன் சர்பராஸ் அகமது, வகாப் ரியாஸ் இணைந்து போராடினர்.

எட்டாவது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது ஸ்டார்க் 'வேகத்தில்' வகாப் (45) அவுட்டாக, பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு மங்கியது. சர்பராஸ் (40) 'ரன்-அவுட்' ஆனார். பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில், 266 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. ஷஹீன் அப்ரிதி (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

மூலக்கதை