ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்: ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்: ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிஆர்பிஎப் படை வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம்  அனந்தநாக் மாவட்டத்தில் கேபி சவுக் பகுதியில் பேருந்து நிலையம் அருகே சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது திடீரென அங்கு  வந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் கையெறி குண்டுகளை வீசினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு  பதிலடி கொடுத்துள்ளனர். இருதரப்பு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்ந தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்  கொல்லப்பட்டான். மேலும் 5 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்தாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியை நோக்கி கூடுதல் பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதி  பாதுகாப்புப் படையினர் வளைத்திற்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த 5 பாதுகாப்பு  படை வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்ட நிலையில், 5 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இரண்டு  பயங்கரவாதிகள் தானியங்கி ஆயுதங்களை கொண்டு தாக்குதலை நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமாவில்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மீண்டும் அதுபோன்ற ஒரு தாக்குதல் பாதுகாப்பு படையினரை  குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில ஆளுநர் சத்தியபால் மாலிக், பயங்கரவாதிகள் ஆயுதங்களை விடுத்து பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில்  இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு  நீட்டிக்க இன்று மாலை நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை