தனியார் வல்லுனர்களுக்கு அரசு வேலை; மத்திய அரசு முடிவு

தினமலர்  தினமலர்
தனியார் வல்லுனர்களுக்கு அரசு வேலை; மத்திய அரசு முடிவு

புதுடில்லி: தனியார் துறை வல்லுனர்களை, அரசு துறைகளில், குறிப்பிட்ட காலத்திற்கு பணியமர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


பிரதமராக மோடி, ஐந்தாண்டுகளுக்கு முன் பொறுப்பேற்றதும், மத்திய அரசின் நிர்வாகத்தை மேம்படுத்த, பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். தனியார் துறையின் வல்லுனர்களை, குறிப்பிட்ட காலத்திற்கு, மத்திய அரசில் பணியமர்த்துவது என்பதும், அதில் ஒன்று. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை, இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுவரை, 15க்கும் மேற்பட்டோர், மத்திய அரசில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, கூடுதல் செயலர் அல்லது இயக்குனர் பதவி மற்றும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் துறை வல்லுனர்கள், 40 பேரை, கூடுதலாக அரசில் இணைக்க, மத்திய அரசு, அறிவிப்பு வெளியிட்டுள்ளது; இதற்காக, 6,077 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும், யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையம், தனியார் துறை வல்லுனர்களை தேர்ந்தெடுக்கிறது.


வழக்கமாக, இதுபோன்ற பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர், 'குரூப் - 1' தேர்வில் வெற்றி பெற்றவர்களாக இருப்பர். ஆனால், தனியார் துறையில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்களின் திறமை, அரசு துறைகளுக்கு அவசியம் என்பதால், தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயமில்லை என, மத்திய அரசு கருதுகிறது.

மூலக்கதை