அரை இறுதிக்கு முன்னேறியது ஜப்பான்

தினகரன்  தினகரன்
அரை இறுதிக்கு முன்னேறியது ஜப்பான்

புவனேஸ்வரில் நடைபெற்று வரும் எப்ஐஎச் ஹாக்கி தொடரில் நேற்று நடந்த முதலாவது கிராஸ் ஓவர் ஆட்டத்தில் ஜப்பான் - போலந்து அணிகள் மோதின. 7வது நிமிடத்திலேயே போலந்து அணி வீரர் கம்னி அபாரமாக கோல் அடிக்க, அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய ஜப்பான் அணிக்கு யமாடா 20வது நிமிடத்திலும், ஸெண்டனா 23வது நிமிடத்திலும் கோல் அடித்து முன்னிலை கொடுத்தனர்.போலந்து வீரர் ஹல்போஜ் 26வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்த 2-2 என சமநிலை ஏற்பட்டது. அதன் பிறகு ஜப்பான் அணியினரின் ஒருங்கிணைந்த ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போலந்து வீரர்கள் சோர்ந்து போயினர். இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஜப்பான் அணிக்கு டெனகா (32’), யாமசாகி (36வது மற்றும் 60வது நிமிடம்), கிடாஸாடோ (47’) ஆகியோர் அடுத்தடுத்து கோல் போட்டனர்.ஆட்ட நேர முடிவில் ஜப்பான் அணி 6-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் முதல் அரை இறுதியில் இந்தியா - ஜப்பான் மோதுகின்றன. ரஷ்யா - தென் ஆப்ரிக்கா இடையே நடக்கும் 2வது கிராஸ் ஓவர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை 2வது அரை இறுதியில் அமெரிக்கா சந்திக்கிறது.

மூலக்கதை