‘ரிசர்வ் டே’ சாத்தியமா | ஜூன் 12, 2019

தினமலர்  தினமலர்
‘ரிசர்வ் டே’ சாத்தியமா | ஜூன் 12, 2019

நாட்டிங்காம்: ‘‘உலக கோப்பை லீக் போட்டிகளுக்கு ‘ரிசர்வ் டே’ சாத்தியமில்லை,’’ என, ஐ.சி.சி., தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில், ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பிரிஸ்டலில் நடக்க இருந்த இலங்கை–பாகிஸ்தான், இலங்கை–வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ரத்தானது. சவுத்தாம்ப்டனில் நடந்த தென் ஆப்ரிக்கா–விண்டீஸ் அணிகள் மோதிய போட்டி 7.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இன்று நாட்டிங்காமில் நடக்கவுள்ள இந்தியா–நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியும் மழையால் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஐ.சி.சி., அட்டவணைப்படி, லீக் போட்டிகளுக்கு ‘ரிசர்வ் டே’ கிடையாது. ஆனால் இங்கிலாந்தில் திடீரென ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றத்தால் நிறைய லீக் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ‘ரிசர்வ் டே’ அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஐ.சி.சி., சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கூறியது: உலக கோப்பை தொடரில் ஒவ்வொரு லீக் போட்டிக்கும் ‘ரிசர்வ் டே’ என்பது சாத்தியமில்லாத ஒன்று. தொடர் முடிய நீண்ட நாட்களாகிவிடும். தவிர, ஆடுகளத்தை தயார் படுத்துவது, வீரர்களின் பயணம், தங்குமிடம், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், அம்பயர்கள், ஒளிபரப்பு, ரசிகர்கள் உள்ளிட்ட நிறைய பிரச்னைகள் உள்ளன.

பொதுவாக இங்கிலாந்தில் ஜூன் மாதம் என்பது 3வது வறட்சி மாதம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கு 2 மி.மி., மழை பதிவானது. ஆனால் தென் கிழக்கு இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 100 மி.மி., மழை பதிவாகி உள்ளது. ‘நாக்–அவுட்’ போட்டிகளுக்கு ‘ரிசர்வ் டே’ உண்டு. லீக் சுற்றில் மழை குறுக்கிடும் பட்சத்தில், குறைந்த ஓவரில் போட்டியை நடத்த முயற்சிப்போம்.

இவ்வாறு ரிச்சர்ட்சன் கூறினார்.

மூலக்கதை