‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா: இன்று நியூசி.,யுடன் மோதல் | ஜூன் 12, 2019

தினமலர்  தினமலர்
‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா: இன்று நியூசி.,யுடன் மோதல் | ஜூன் 12, 2019

நாட்டிங்காம்: உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் அசத்தினால் ‘ஹாட்ரிக்’ வெற்றியை இந்தியா பதிவு செய்யலாம்.

இங்கிலாந்து மண்ணில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று நாட்டிங்காமில் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

துவக்கத்தில் ராகுல்

லீக் சுற்றில் இந்திய அணி முதலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. பின் ஐந்து முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவை சாய்த்தது. இதனால், இன்று நியூசிலாந்தை சுலபமாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. துவக்க வீரர்களான ரோகித், ஷிகர் தவான் இருவரும் தலா ஒரு சதம் அடித்தனர். இதற்கிடையே, இடதுகை பெருவிரல் காயம் காரணமாக அடுத்த மூன்று போட்டியிலிருந்து தவான் விலகியது பின்னடைவு. இவருக்குப்பதில் லோகேஷ் ராகுல் துவக்கம் தர உள்ளார்.

வருவாரா விஜய்

கேப்டன் கோஹ்லி வழக்கம் போல ஆதிக்கம் செலுத்தலாம். கடந்த முறை 82 ரன் விளாசிய இவர், இன்று சதம் எட்ட முயற்சிக்கலாம். நான்காவது இடத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களான தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விஜய் ‘ஆல் ரவுண்டர்’ என்பது பலம். அனுபவத்தில் தினேஷ் முந்துகிறார். இருவரையும் களமிறக்க எண்ணினால், ஜாதவிற்கு ‘லெவன்’ அணியில் இடம் கிடைக்காது. ‘மின்னல் வேகத்தில்’ ரன் குவிக்க ஹர்திக் பாண்ட்யா, ‘சீனியர்’ தோனி உள்ளனர்.

மிரட்டும் ‘வேகம்’

இந்திய பவுலர்கள் பும்ரா (5 விக்.,), புவனேஷ்வர் (5 விக்.,) ‘வேகத்தில்’ போட்டுத்தாக்குவது பலம். இவர்களுக்கு கைகொடுக்க பாண்ட்யாவும் உள்ளார்.  சகால் ‘சுழல்’ வலை வீச தயார். குல்தீப் செயல்பாடுதான் (20 ஓவர், ஒரு விக்.,) சிறப்பாக இல்லை. இன்று இவருக்குப்பதில் வேகப்பந்துவீச்சாளர் ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

வலுவான நியூசி.,

நியூசிலாந்து மூன்று போட்டியிலும் வாகை சூடியது. கப்டில், மன்ரோ ஜோடி முதல் போட்டியில் அரை சதம் கடந்தது. கேப்டன் வில்லியம்சன் வெற்றிக்கு வித்திடுவதில் கெட்டிக்காரர். ‘சீனியர்’ ராஸ் டெய்லர், லதாம், நீஷம், கிராண்ட்ஹோம் இருப்பதால், ‘ஸ்கோர்’ சீராக உயரும்.

‘வேகத்தில்’ ஹென்றி (7 விக்.,) பெர்குசன் (8 விக்.,) அபாயகரமான பவுலர்களாக வலம் வருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பவுல்ட், 3 போட்டியில் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார். நமது அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இவர் நான்கு விக்கெட் அள்ளியதால், இன்று சுதாரிப்புடன் இருக்க வேண்டும்.

மழை தொல்லை

இன்றைய போட்டிக்கு மழை மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. போட்டி நடக்கவுள்ள நாட்டிங்காம் பகுதியின் இன்றைய வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 13, குறைந்தபட்சம் 9 டிகிரி செல்சியாக இருக்கும். மழை வர 80 சதவீதம் வாய்ப்புள்ளது. அந்நாட்டு நேரப்படி, மாலை 6 மணி வரை கனமழை இருக்கும் என்பதால், போட்டி முழுவதுமாக நடப்பது சந்தேகம்.

இதுவரை...

நாட்டிங்காம் மைதானத்தில் இதுவரை இந்திய அணி 6 போட்டிகளில் பங்கேற்று, தலா 3 வெற்றி, தோல்வி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை 7 போட்டியில், 2 வெற்றி, 5 தோல்வி அடைந்துள்ளது. இரு அணிகளும் இதுவரை மோதிய ஒரு போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

106

சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் 106 முறை மோதி உள்ளன. இதில் இந்தியா 55, நியூசிலாந்து 45 போட்டிகளில் வெற்றி பெற்றன. ஒரு போட்டி ‘டை’ ஆனது. ஐந்து போட்டிகளுக்கு முடிவு இல்லை.

7

உலக கோப்பை அரங்கில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் 7 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 3 (1987ல் 2 முறை, 2003), நியூசிலாந்து 4 (1975, 1979, 1992, 1999) போட்டிகளில் வெற்றி பெற்றது.

கடைசியாக 2003ல் செஞ்சுரியனில் நடந்த போட்டியில் இவ்விரு அணிகள் மோதின. இதில் இந்திய அணி (150/3, 40.4 ஓவர்) 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை (146/10, 45.1 ஓவர்) வீழ்த்தியது.

 

மூலக்கதை