தனக்காக வாழ்க்கையை தியாகம் செய்த தாய்க்கு திருமணம் செய்து வைத்த இன்ஜினியர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

தினகரன்  தினகரன்
தனக்காக வாழ்க்கையை தியாகம் செய்த தாய்க்கு திருமணம் செய்து வைத்த இன்ஜினியர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

திருவனந்தபுரம்:  தனக்காக வாழ்க்கையையே தியாகம் செய்த தாய்க்கு திருமணம் செய்து வைத்த இன்ஜினியரின் செயலுக்கு பேஸ்புக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலம் கொல்லம் அருகே கொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் மினி (44). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். இவரது மகன் கோகுல் (23). மினியின் முதல் கணவர் ஸ்ரீதர். இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஸ்ரீதர் தினமும் மினியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக மினி தனது ஆசிரியை பணியையும் விட வேண்டிய நிலை ஏற்பட்டது. நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்ததால் மினி கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். அப்போது கோகுல் 10ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டைவிட்டு வெளியேறிய அவர்கள் உறவினர் வீடுகளில் தங்கினர். விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு வீடு கிடைத்தது.  அந்த வீட்டில் வசித்த அவர்களுக்கு வருமானம் இல்லாததால் மினி ஒரு நூலகத்தில் பணிபுரிந்து மகனை வளர்த்து வந்தார்.தனக்காக தாய் தனிமையில் படும் துன்பத்தை பார்த்து கோகுல் மனம் உருகினார். நான் பெரிய ஆளாக வளர்ந்தபின் தாய்க்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பேன் என கூறி வந்தார். மினி தனக்கு கிடைக்கும் சொற்ப வருவாயை வைத்து கோகுலை இன்ஜினியரிங் படிக்க வைத்தார். இன்ஜினியரிங் முடித்த கோகுல் தற்போது வேலையில் சேர்ந்துள்ளார். இப்போது  தனது நண்பர்கள், உறவினர்களின் உதவியுடன் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்த வேணு என்ற முன்னாள் ராணுவ அதிகாரியை பார்த்து, அவருடன் தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். கடந்த 3 தினங்களுக்கு முன்பு கோகுல் முன்னிலையில் மினி-வேணு திருமணம் நடந்தது. இந்த தகவலை கோகுல் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:எனது தாயின் திருமணம் நடந்தது. இப்படியொரு தகவலை வெளியிட வேண்டுமா என பலமுறை சிந்தித்தேன். 2வது திருமணத்தை இந்த நவீன காலகட்டத்திலும் ஏற்றுக்கொள்ளாத ஏராளமானோர் உள்ளனர். ஆனாலும் வாழ்க்கை முழுவதும் எனக்காக தியாகம் செய்த எனது தாய்க்காக அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். எனது தாய்க்கு திருமண வாழ்க்கை கசப்பானதாகவே இருந்தது. எனது தந்தையின் துன்புறுத்தல் காரணமாக ரத்தம் சொட்ட சொட்ட நான் பலமுறை எனது தாயை பார்த்துள்ளேன். அப்போதெல்லாம் இப்படியொரு வாழ்க்கை வேண்டுமா என கேட்பேன். அப்போது, உனக்காகத்தான் நான் வாழ்கிறேன். உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். எந்த கொடுமையையும் தாங்கிக்கொள்வேன் என கூறினார். அப்போதே எனது தாயின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக ஆக்க வேண்டும் என முடிவு செய்தேன். இப்போது நான் படித்து முடித்து வேலையில் சேர்ந்துவிட்டேன். நான் வேலைக்கு சென்ற பிறகு எனது தாய் தனிமையில் இருப்பார். எனவே அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன். முதலில் அவர் சம்மதிக்கவில்லை. பின்னர் எனது வேண்டுகோளை ஏற்று சம்மதித்தார். இப்போது நான் நிம்மதியாக உணர்கிறேன் என கூறியுள்ளார்.கோகுலின் இந்த பதிவுக்கு பேஸ்புக்கில் ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன.

மூலக்கதை