ஆந்திர சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கியது: முதல்வர் ஜெகன்மோகன், சந்திரபாபு உட்பட 175 எம்எல்ஏக்கள் பதவியேற்பு

தினகரன்  தினகரன்
ஆந்திர சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கியது: முதல்வர் ஜெகன்மோகன், சந்திரபாபு உட்பட 175 எம்எல்ஏக்கள் பதவியேற்பு

திருமலை: ஆந்திர மாநிலத்தின் 15வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதல்வர் ஜெகன்மோகன், எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு உட்பட 175 எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. கடந்த 30ம் தேதி மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து கடந்த 8ம் தேதி 5  துணை முதல்வர்களும், 25 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் ஆந்திராவின் 15வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் இடைக்கால சபாநாயகர் வெங்கடசின்ன அப்பல் நாயுடு தலைமையில் நடைபெற்றது. இதில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி  சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இதேபோல் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, 5 துணை முதல்வர்கள் மற்றும் 25 அமைச்சர்கள், ஜனசேனா கட்சியை சேர்ந்த வரபிரசாத் உட்பட 175  எம்எல்ஏக்களும் பதவி  ஏற்றுக்கொண்டனர்.இன்று சபாநாயகராக தம்மிநேனி சீதாராம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதையொட்டி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு மற்றும் மாநில அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து சபாநாயகர்  நாற்காலிக்கு அழைத்து சென்று தம்மிநேனி சீதாராமை அமர வைக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து நாளை காலை சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை குறித்து அரசின் திட்டங்கள் குறித்து கவர்னர் நரசிம்மன் உரையாற்ற உள்ளார். 15, 16ம் தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி கவர்னர்  உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதில், எதிர்க்கட்சியினர் எழுப்பும்   கேள்விகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி விளக்கமளிக்க உள்ளார்.ரோஜாவுக்கு புதிய பதவிஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ.வும் நடிகையுமான ரோஜா, தனக்கு அமைச்சர் பதவி வழங்காததால் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை அவரது இல்லத்தில்  சந்தித்து பேசினார். இதையடுத்து ஆந்திர மாநில தொழிற்சாலைகள்  உள்கட்டமைப்பு வாரிய தலைவராக ரோஜா நேற்று நியமிக்கப்பட்டார். இதேபோன்று  அரசு கொறடாவாக ஏற்கனவே காந்த் ரெட்டி, முத்தியால நாயுடு, தாடிசெட்டி ராஜா,   செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தற்போது  ஜக்கய்யபேட்டை எம்எல்ஏ உதயபானு, மாச்சர்லா எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டி,  ராயதுர்கம் எம்எல்ஏ ராமச்சந்திராரெட்டி ஆகிய மேலும் 3 பேர் அரசு  கொறடாவாக  நியமிக்கப்பட்டுள்ளனர்.5 மண்டலங்களாக பிரிகிறது மாநிலம்அமைச்சர் பதவியை எதிர்பார்த்து இடஒதுக்கீட்டின் காரணமாக பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்களை திருப்திபடுத்தும் விதமாக ஜெகன் ஆலோசித்து வருகிறார். அதில் முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி  இருந்தபோது ஒருங்கிணைந்த ஆந்திரா தெலங்கானா, ராயலசீமா, கடலோர ஆந்திரா என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆட்சி நடத்தப்பட்டது. தற்போது அதேபோல் ஆந்திராவை வடஆந்திரா, கடலோர ஆந்திரா, ராயலசீமா உட்பட 5  மண்டலங்களாக பிரித்து அந்த 5 மண்டலங்களுக்கு வளர்ச்சி குழு தலைவராக அமைச்சருக்கு உண்டான பதவியை ஏற்படுத்தி நியமிக்க ஜெகன் முடிவு செய்துள்ளார். இதனால் பதவி கிடைக்காமல் ஏமாற்றத்திற்குள்ளான மூத்த தலைவர்களை  திருப்திபடுத்தவும் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி ஏற்படுத்தவும் சுலபமாக இருக்கும் என ஜெகன்மோகன் கருதுகிறார்.

மூலக்கதை