உபி.யில் தடம் புரண்ட சரக்கு ரயிலை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் மீது ரயில்வே போலீசார் தாக்குதல்

தினகரன்  தினகரன்
உபி.யில் தடம் புரண்ட சரக்கு ரயிலை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் மீது ரயில்வே போலீசார் தாக்குதல்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் தடம் புரண்ட சரக்கு ரயிலை வீடியோ எடுத்த பத்திரிக்கையாளர் மீது ரயில்வே போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்  தெரிவித்ததோடு, அவரை ஜாமீனில் வெளியே விடவும் உத்தரவிட்டது. பத்திரிக்கையாளர் மீதான இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று லக்னோவில் தடம் புரண்ட சரக்கு ரயிலை வீடியோ எடுத்த பத்திரிக்கையாளரை ரயில்வே போலீசார் தாக்கியதாக தகவல் வௌியாகி இருக்கிறது. ஷாம்பியில் சரக்கு ரயிலில் சில பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த  பத்திரிகையாளர் ஒருவர் அங்கு சென்று தடம் புரண்ட ரயில் பெட்டிகளை வீடியோ எடுத்துள்ளார். இதற்கு அங்கிருந்த ரயில்வே போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பத்திரிகையாளர் மற்றும் ரயில்வே போலீசாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பத்திரிகையாளர் அமித் சர்மாவை ரயில்வே போலீசார் இரண்டு பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரை கைது செய்ததாக தெரிகிறது. இதனை அங்கிருந்த மற்றொருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி உள்ளூர் ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து மாநில காவல்துறை இயக்குனர் ஜெனரல் ஓபி சிங், ரயில்வே போலீசார் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். இரண்டு ரயில்வே போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் பத்திரிக்கையாளர் சர்மா விடுவிக்கப்பட்டார்.

மூலக்கதை