வாயு புயல் இன்று காலை கரை கடப்பதால் பாதுகாப்பான இடங்களுக்கு 3 லட்சம் பேர் வெளியேற்றம்: குஜராத் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தினகரன்  தினகரன்
வாயு புயல் இன்று காலை கரை கடப்பதால் பாதுகாப்பான இடங்களுக்கு 3 லட்சம் பேர் வெளியேற்றம்: குஜராத் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அகமதாபாத்: வாயு புயல் அதி தீவிரமாக மாறி குஜராத்தின் போர்பந்தர்-டையூ இடையே இன்று காலை கரையை கடக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு  வருகின்றனர். அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. இதற்கு ‘வாயு’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் - மஹிமா இடையே இன்று வாயு புயல் கரையை  கடக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் போர்பந்தர் - டையூ பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 155 கிமீ  முதல் 170 கிமீ வேகத்துக்கு பலத்த காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.வாயு புயல் முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10 மாவட்டங்களை சேர்ந்த 2.91 லட்சம் மக்கள் பாதுகாப்பான  இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.36 கம்பெனியை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டள்ளனர். கடலோர பகுதியில் ராணுவ வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும்  இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியஅரசு கண்காணிக்கிறது: வாயு புயல் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “வாயு புயல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும்,  நலமாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.  இதற்கிடையே, குஜராத் கடற்கரையோரத்தில் இருக்கும் அனைத்து துறைமுக நடவடிக்கைகளையும்  நிறுத்தி வைக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,  விமான நிலையங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இருந்து  இந்த பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்கள் ரத்துவாயு புயல் கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கையாக குஜராத்தின் ஓக்கா, போர்பந்தர், பாவ்நகர், புஜ், மற்றம் காந்திதம் ரயில் நிலையங்களுக்கு இயக்கப்படும் அனைத்து மேற்கு ரயில்வேயின் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் நேற்று  மாலை 6 மணி முதல் வெள்ளியன்று காலை வரை ரத்து செய்யப்படுகின்றது. அதே நேரத்தில் காந்திதம், பாவ்நகர், போர்பந்தர், வீரவாள் மற்றும் ஓக்காவில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மேற்கு  ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் அனைத்து ரயில்வே அதிகாரிகளும், தேவையான ஊழியர்கள், ஜேசிபி, மரங்களை வெட்டும் இயந்திரம், தண்ணீர்தொட்டிகள், டிராக்டர், ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றுடன் தயார் நிலையில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை