மக்களுக்கு நன்றி தெரிவிக்க ரேபரேலி சென்றனர் சோனியா, பிரியங்கா

தினகரன்  தினகரன்
மக்களுக்கு நன்றி தெரிவிக்க ரேபரேலி சென்றனர் சோனியா, பிரியங்கா

ரேபரேலி: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல் முறையாக ரேபரேலி தொகுதிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி நேற்று சென்றார். மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில்  ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரசால் வெற்றி  பெற முடிந்தது. அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பாஜ.வை சேர்ந்த ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.  ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி,  முதல் முறையாக நேற்று தனது தொகுதிக்கு சென்றார். அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அவருடைய  மகளுமான  பிரியங்கா காந்தியும் வந்தார்.பர்சட்கன்ஞ் விமான நிலையத்தில் வந்திறங்கிய சோனியா, பிரியங்கா காந்தியை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். வாக்களித்து வெற்றி பெற செய்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சோனியா வந்துள்ளார். நன்றி  தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க 2,500 கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதனிடையே அமேதி மக்களவை தொகுதிக்கு சோனியா காந்தியும், பிரியங்காவும் செல்வதற்கு வாய்ப்பில்லை என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

மூலக்கதை