பிரதமர் மோடி பயணம் செய்யும் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்லாது: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடி பயணம் செய்யும் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்லாது: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியே செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஓமன் நாட்டு வான்வெளி வழியாக செல்லும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜுன் 13 மற்றும் 14ம் தேதிகளில் ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தானின் வான் எல்லை வழியாக கிர்கிஸ்தானில் உள்ள பிஸ்கேக் நகருக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார். புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து பாலக்கோட் என்னும் இடத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தடை விதித்தது. பாகிஸ்தானில் மொத்தம் 11 வழித்தடங்கள் உள்ளன. இதில் 2 வழித்தடத்தில் மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 வழித்தடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது வரை தடை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கிர்கிஸ்தான் நாட்டிற்கு செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டிய நிலை பிரதமர் மோடிக்கு ஏற்பட்டது. இதனையடுத்து மோடி செல்வதற்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியா அரசு பாகிஸ்தான் அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் வான்வெளி வழியே மோடி பயணம் செய்யும் விமானம் பறப்பதற்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தகவல் அளித்தது. இதையடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமில்லை என இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஷாங்காய் மாநாட்டிற்கு செல்ல பிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்லாது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை