ஜூலை மாதம் 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஜூலை மாதம் 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சந்திராயன்2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெங்களூரு: இந்தியா கடந்த 2008ம் ஆண்டு நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. இதனால் ரூ.800 கோடி செலவில் அனுப்பப்பட்ட சந்திராயன்-1 திட்டம் வெற்றி பெற்றது. இதையடுத்து நிலாவை மேலும் ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 விண்கலம் திட்டத்துக்கு இஸ்ரோ முடிவு செய்தது. பல நூறு கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் இஸ்ரோ முதன்முறையாக விண்கலத்தின் காட்சிகளை வெளியிட்டுள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தை ஜூலை மாதத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவ ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராக்கெட்டில் இணைக்கப்படவிருக்கும் சந்திராயன்-2.,வின் காணொளியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விண்கலத்தின் ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய 3 பகுதிகளை பி.எஸ்.எல்.வி எம்.கே-3 ராக்கெட் சுமந்து செல்கிறது. இதில் லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சந்திராயன்-2 புவியிலிருந்து ஏவப்பட்டாலும் ஆர்பிட்டரானது ப்ரோபல்ஷன் மூலம் சந்திரனைச் சென்றடையும். அதன் பிறகு லேண்டரும், ரோவரும் தனியாகப் பிரிந்து சென்று சந்திரனின் தென் துருவ தரைப் பகுதியை அடையும். பின்னர் லேண்டரில் இருந்து விடுபடும் ரோவர் வாகனம் சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்ளும். பூமியிலிருந்து புறப்பட்ட 14வது நாளில் சந்திராயன்-2 நிலவை எட்டி ஆய்வுகளை தொடங்கும். சந்திராயன்-2 விண்கலத்தின் மொத்த எடை 3,290 கிலோ ஆகும். இஸ்ரோ சிவன் பேட்டிஇதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திராயன்-2 விண்கலம் லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளுடன் ஜிஎஸ்எல்வி மார்க்-III ஏவுகனை மூலம் வரும் ஜூலை மாதம் 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்ட பிறகு முதலில் அது தனது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு நிலவின் சுற்றுப்பாதைக்கு அந்த விண்கலம் மாறும். அதன் பிறகு நிலவின் மேற்பரப்பில் அந்த விண்கலத்தின் ரோவர் வாகனம் தரை இறக்கப்படும். மொத்தம் 13 வகையான கருவிகள் மற்றும், நவீன முப்பரிமான கேமராக்கள் சந்திராயன்-2 விண்கலத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் 6ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக ரோவர் வாகனத்தை நிலவில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். நிலவின் தெற்கு பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் முதல் செயற்கைகோள் இது என்று கூறியுள்ளார்.

மூலக்கதை