‘எங்களுக்கு நேரம் சரியில்லை’: புலம்புகிறார் கருணரத்னே

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘எங்களுக்கு நேரம் சரியில்லை’: புலம்புகிறார் கருணரத்னே

பிரிஸ்டல்: ‘‘எங்களுக்கு நேரம் சரியில்லை’’ என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் கருணரத்னே தெரிவித்துள்ளார். ஐசிசி உலக கோப்பை தொடரில் நேற்று பிரிஸ்டலில் நடைபெற இருந்த வங்கதேசம்-இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக ரத்தானது.

நேற்று முன்தினம் இரவில் பெய்த மழை காரணமாக ஆடுகளம் நனையாமல் இருக்க தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தது. இதனால் டாஸ் போடுவது தாமதமானது.

தார்பாயை அகற்றிய பின்னர், குறித்த நேரத்தில் போட்டி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தூறலாக மழை பெய்தது. சிறிது நேரத்தில் கனமழை கொட்டியதால், மைதானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக பின்னர் நடுவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. பிரிஸ்டல் மைதானத்தில் ஏற்கனவே பாகிஸ்தான் - இலங்கை, வங்கதேசம் - இலங்கை என 2 லீக் ஆட்டங்களும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.இங்கு ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்த முதல் போட்டியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டதால், போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

வங்கதேச அணியின் கேப்டன் மஸ்ரபே மோர்டஷா கூறுகையில், ‘‘எந்த அணியாக இருந்தாலும், மைதானத்திற்கு வந்த பின்னர் போட்டி ரத்தானால் ஏமாற்றமும், எரிச்சலும் ஏற்படும். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தாலும், எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இப்போட்டி ரத்தானது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஷாகிப் உடல் நலம் தேறி வருகிறார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடுவார்’’ என்று தெரிவித்தார்.

இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே கூறுகையில், ‘‘எங்களுக்கு நேரம் சரியில்லை.

மழை காரணமாக 2 போட்டிகளை இழந்துள்ளோம். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிக்காக கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறோம்.

அடுத்து நடக்க ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.

அதிருப்தியில் கேப்டன்கள்
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் போட்டி என்பதால் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டிக்கும் 2 நாட்கள் ஒதுக்கப்பட்டு வந்தது.

ஒருநாள் மழை பெய்தால், அடுத்த நாள் அப்போட்டி நடத்தப்படும். ஆனால் இந்த உலக கோப்பை தொடரில் அந்த முறை பின்பற்றப்படவில்லை.

இதனால் கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த தொடர் துவங்கி 12 நாட்களே ஆன நிலையில் இதுவரை மழை காரணமாக 3 போட்டிகள் ரத்தாகியுள்ளன.

அடுத்து வரும் போட்டிகளிலும் மழை குறுக்கிடும் வாய்ப்புகள் உள்ளன.

.

மூலக்கதை