கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் பச்சை தமிழகம் கட்சி நிறுவனர் உதயகுமார் திடீர் மாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் பச்சை தமிழகம் கட்சி நிறுவனர் உதயகுமார் திடீர் மாயம்

நெல்லை: இந்தியா - ரஷ்ய கூட்டு முயற்சியுடன் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடக்கிறது. மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. தேசிய அணுமின் கழகம் அணுமின் நிலைய எரிபொருள் கழிவுகளை சேமிக்கும் வளாகத்தையும் கூடங்குளத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட எரிபொருள் வளாகம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஜூலை 10ம் தேதி ராதாபுரத்தில் நடப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த இடத்தை மாற்றவும் முயற்சி நடந்து வருகிறது.



அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர் அணு உலை கழிவுகள் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்ததோடு, பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வாயிலாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். போராட்டக் குழுவினரை திரட்டும் வகையில் நெல்லையில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பின்னர் அனைவரும் திரண்டு நெல்லை கலெக்டரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பச்சை தமிழகம் நிறுவனர் சுப. உதயகுமார் நேற்று நாகர்கோவிலில் இருந்து பஸ்சில் சென்றார்.

நெல்ைல புதிய பஸ் நிலையத்தில் வந்து இறங்கியவுடன் அவரை கண்காணிக்க உளவுத்துறை போலீசாரும், சட்டம் ஒழுங்கு போலீசாரும் புதிய பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

அவர் அங்கிருந்து அணுஉலை எதிர்ப்பாளர்களை திரட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலம் செல்லக்கூடும் என்று தெரியவந்ததால் நெல்லை கலெக்டர் அலுவலகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நாங்குநேரியை தாண்டிய பின்னர் உதயகுமார் பஸ்சில் இருந்து மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. மூன்றடைப்பு பகுதியில் அவர் பஸ்சில் இருந்து இறங்கி ஒரு காரில் சென்று விட்டதாக உளவுப்பிரிவு ேபாலீசார் தெரிவித்தனர்.

அணு உலை எதிர்ப்பாளர்கள் பாளை வீரமாணிக்கபுரத்தில் கூடி அவர் இல்லாமலே கூட்டத்தை நடத்தினர். அங்கும் உதயகுமார் திடீரென வரக்கூடும் என போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அவர் வரவில்லை.

‘’ உதயகுமாரை கைது செய்யும் திட்டம் இல்லை’’ என போலீசார் தெரிவித்தனர்.

.

மூலக்கதை