சுற்றுலா தீவு திட்டத்தை கண்டித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் மீனவர்கள் முற்றுகையால் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சுற்றுலா தீவு திட்டத்தை கண்டித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் மீனவர்கள் முற்றுகையால் பரபரப்பு

ராமநாதபுரம்: சுற்றுலா தீவு திட்டத்தை கைவிடக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் குருசடை உள்ளிட்ட நான்கு தீவுகளை சுற்றுலாப்பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் வனத்துறை சார்பில், சுற்றுலா திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கண்ணாடி இழைப்படகுகளில் சுற்றுலாப்பயணிகள் பயணித்து, மீன்கள், பவளப்பாறைகளை கண்டுகளிக்கும் வகையில் அமைய உள்ள இத்திட்டத்துக்காக, தீவுகளை சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட பகுதி என குறிக்கும் வகையில் மிதக்கும் பலூன்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக மீன்பிடித்தொழில் பாதிக்கப்படும் என்று இந்த திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பாரம்பரிய மீனவர்கள் சங்கத்தினர்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்ட வளாகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தி மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு, கடல் தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியூ) மாவட்ட தலைவர் முனியாண்டி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுற்றுலாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாரம்பரியமாக தீவுகளில் மீன் பிடிக்கும் தங்களை அனுமதிக்கக் கோரியும் கோஷமிட்டனர். இதன்பின்னர் அவர்கள் வனத்துறையினரைச் சந்தித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மீனவர் நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்படும்’’ என்றனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும்’’ என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை