தமிழகத்தில் தானாக ஆட்சி கலையும்: திருநாவுக்கரசர் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் தானாக ஆட்சி கலையும்: திருநாவுக்கரசர் பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்பி அளித்த பேட்டி: அதிமுகவில் நிலவும் ஒற்றை தலைமை பிரச்னையால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விட்டது. எந்தக் கட்சியாக இருந்தாலும் அதற்கு ஒற்றை தலைமை இருப்பதுதான் சிறந்தது.

அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கிடையாது. ஆனால் தானாகவே இந்த ஆட்சி கலையும் சூழல் ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

இன்னும் ஒன்றரை வருஷம் நீடிக்கும் இந்த ஆட்சியால் அதிமுகவிற்கு கெட்ட பெயரும் ஊழலும்தான் அதிகரிக்கும். சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போது கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையின் மூலமாகத்தான் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்து ஸ்டாலின் முடிவெடுப்பார்.



நடிகர் சங்கத்தில் நானும் ஆயுட்கால உறுப்பினர். தற்போது நடைபெறும் தேர்தல் ஆரோக்கியமான தேர்தலாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு திட்டமாக இருந்தாலும் சரி மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரும்போது அதனை எதிர்த்து திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள். தற்போது தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதால் மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

தமிழக அரசு அதை பெற்று குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


.

மூலக்கதை