மூவரசன்பட்டு ஊராட்சிக்கு கல்குவாரி நீரை சுத்திகரித்து வழங்க வேண்டும்: திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மூவரசன்பட்டு ஊராட்சிக்கு கல்குவாரி நீரை சுத்திகரித்து வழங்க வேண்டும்: திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

ஆலந்தூர்: மூவரசன்பட்டு ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க, திரிசூலம் கல்குவாரி நீரை சுத்திகரித்து வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ தா. மோ. அன்பரசன் வலியுறுத்தினார். மூவரசன்பட்டு ஊராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதற்கான நலச்சங்க  கூட்டம் நேற்று மாலை மூவரசன்பட்டு ஊராட்சி மன்ற அலுவலத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஆலந்தூர் திமுக எம்எல்ஏ தா. மோ. அன்பரசன் தலைமை தாங்கினார். இதில் பரங்கிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், கிராம வளர்ச்சி அலுவலர் சிவஞானசுந்தரம், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜிகே. ரவி, செயலாளர்கள் நாராயணன், சங்கர், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நலச்சங்க நிர்வாகிகள் பங்கேற்று, மூவரசன்பட்டு ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க, இங்குள்ள போர்பம்ப்புகளை பழுதுபார்க்க வேண்டும்.

மேலும் ஒருசிலர் குடிநீர் குழாயில் திருட்டு இணைப்பு மூலம் தண்ணீரை உறிஞ்சுகின்றனர்.

இதனால் பலருக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. அந்த இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும்.

மேலும், இப்பகுதிகளுக்கு சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்எல்விடம் மனு அளித்தனர். பின்னர் தா. மோ. அன்பரசன் பேசுகையில், மூவரசன்பட்டு ஊராட்சியில் ராகவா நகர், சபாபதி நகர், ஏரிக்கரை போன்ற பகுதிகளில் புதிதாக 5 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்.

பழுதடைந்த 5 கைபம்ப்புகள் சீரமைக்கப்படும், இப்பகுதியில் சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும். குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, திரிசூலம் கல்குவாரி நீரை சுத்திகரித்து, பொது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தா. மோ. அன்பரசன் கூறினார்.

இதில் நலச்சங்க நிர்வாகிகள் பாபு, இளம்வழுதி, வி. பிரபாகரன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை