திருத்தணி நகராட்சியில் சிமென்ட்ஷீட் கூரைவீட்டில் அங்கன்வாடி மையம்: அனலில் குழந்தைகள் அவதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருத்தணி நகராட்சியில் சிமென்ட்ஷீட் கூரைவீட்டில் அங்கன்வாடி மையம்: அனலில் குழந்தைகள் அவதி

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட சிமென்ட்ஷீட் கூரைவீட்டில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதனால் அனல் தாங்காமல் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

திருத்தணி நகராட்சி, 12-வது வார்டான பெரியார் நகர், பால விநாயகர் கோவில் தெருவில் ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இம்மையத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இம்மையத்துக்கு ஒன்றிய பராமரிப்பில் இருந்து தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் இல்லாததால், இந்த அங்கன்வாடி மையம் ஒரு தனியாரின் வீட்டில் வாடகைக்கு இயங்கி வருகிறது.இந்த மையத்தின் மேற்கூரை தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட சிமென்ட்ஷீட்களினால் வேயப்பட்டு உள்ளது. தற்போதைய கோடை வெயிலின் அனல் தாக்கத்தினால், இங்கு படிக்கும் குழந்தைகள் புழுக்கத்தில் தவித்து வருகின்றனர்.

இதனால் குழந்தைகளின் உடலில் கொப்புளங்களும் உடல் எரிச்சலும் ஏற்பட்டு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரே அறைக்குள் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடைந்து கிடப்பதால், வெயிலின் தாக்கத்தில் மாலை நேரத்தில் வீடு திரும்பும்போது மிகுந்த சோர்வுடன் காணப்படுகின்றனர்.

எனவே, இந்த அங்கன்வாடி மையத்தை வேறொரு காற்றோட்டமிக்க இடத்தில் மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை