எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

புதுடெல்லி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 15% அகில ஒதுக்கீட்டிற்கான இடங்கள் ஆகும். அந்த இடங்களுக்கான கலந்தாய்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதற்காக மருத்துவ கலந்தாய்வு குழு என்பது அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கலந்தாய்வு நடைபெறும் தேதி அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 19ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவு தொடங்குகிறது. மேலும், ஜூன் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆன்லைன் கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அகில ஒதுக்கீட்டு கலந்தாய்வு முழுவதுமாக இணையதளத்தில் ஆன்லைன் கலந்தாய்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நடைபெற உள்ள கலந்தாய்வுக்கு மேல்குறிப்பிட்டுள்ள தேதிகளில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவப்படிப்புகளுக்கு மாணவர்கள் பதிவு செய்யும் போது, தங்களுக்கு சேர விருப்பம் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்து வரிசைப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் தேர்வு செய்து வைத்துள்ள கல்லூரிகளை ஜூன் 25ம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கல்லூரி இடங்கள் ஒதுக்கீட்டுப்பணி ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கல்லூரிகளின் விவரம் ஜூன் 27ம் தேதி வெளியிடப்படும் என மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. இந்த முதற்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கீடு செய்யப்படும் கல்லூரியில் ஜூன் 28ம் தேதியே மாணவர்கள் நேரில் சென்று ரிப்போர்ட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 6ம் தேதி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு முடிந்தபின்  ஜூலை 13ம் தேதியில் இருந்து ஜூலை 22ம் தேதிக்குள் அந்தந்த கல்லுரிகளில் மாணவர்கள் நேரில் சென்று ரிப்போர்ட் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு மட்டுமல்லாமல் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் என அனைத்திற்கும் நடத்தப்படுகிறது.

மூலக்கதை