வதந்தி பரப்பாதீர்கள் : கிரேஸி மோகன் சகோதரர் வேண்டுகோள்

தினமலர்  தினமலர்
வதந்தி பரப்பாதீர்கள் : கிரேஸி மோகன் சகோதரர் வேண்டுகோள்

நாடக ஆசிரியர், நடிகர், வசனகர்த்தா என பன்முகம் திறமை கொண்ட கிரேசி மோகன், ஜூன் 10ம் தேதி மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு அவரது குடும்பத்தாரை மட்டுமல்ல திரையுலகிலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கிரேஸி மோகன் மரணம் தொடர்பாக தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். அவருக்கு சர்க்கரை வியாதி போன்ற நோய் இருந்ததாக அவர்கள் வதந்தி பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இதனை மறுத்து கிரேஸியின் சகோதரர் மாது பாலாஜி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது : எனது சகோதரர் கிரேஸி மோகன் ஜூன் 10-ம் தேதி அன்று மதியம் 2 மணிக்கு காலமானார். நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் எங்களுக்கு வருத்தம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அவர் இறந்தது எங்களது குடும்பத்திற்கே பேர் அதிர்ச்சியாக உள்ளது. காரணம், அவர் வியாதி வந்தோ, கஷ்டப்பட்டோ மரணமடையவில்லை. திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

இறந்த அன்றைய தினம் காலையில் கிரேஸியை சந்தித்தேன். வழக்கம் போல் மகிழ்ச்சியாக பேசினார். எப்போதும் போல் காலை உணவு உட்கொண்டார். 9.45 மணியளவில் எனக்கு போன் செய்து, மூச்சு விட சிரமமாக இருப்பதாகவும், அடி வயிறு வலிப்பதாகவும் கூறினார். உடனடியாக நான் எனது காரை எடுத்துக் கொண்டு, அவரை காவிரி மருத்துவமனையில் அனுமதித்தேன். டாக்டர்கள் தங்களால் முடிந்தளவுக்கு சிகிச்சை கொடுத்தார்கள். அதில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் என்ன செய்வது அவருக்கு வந்தது கடுமையான மாரடைப்பு. நம்மளை எல்லாம் கஷ்டத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்துவிட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக விதி போல் நடந்துவிட்டது.

இந்த நேரத்தில் உங்களிடத்தில் நான் வேண்டுவது எல்லாம். அவர் வியாதி வந்து இறக்கவில்லை. இதுபோன்ற செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அவருக்கு எந்தவிதமான வியாதியும் கிடையாது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற எந்த பிரச்னையும் இல்லை. இறப்பதற்கு முதல் நாள் இரவில் பெருமாள் பெயரில் 12 கவிதைகள் எழுதிவிட்டுத்தான் இறந்துள்ளார். திடீரென்று நிகழ்ந்த சம்பவம் இது. என்ன செய்வது, நம் தலையெழுத்து. நம்மை சோகத்தில் ஆழ்த்திவிட்டு அவர் சந்தோஷமாக கிளம்பிவிட்டார்.

இவ்வாறு மாது பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

மூலக்கதை