முத்தலாக் மசோதா, காஷ்மீரில் மீண்டும் ஜனாதிபதி ஆட்சி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்...பிரகாஷ் ஜவடேகர் தகவல்

தினகரன்  தினகரன்
முத்தலாக் மசோதா, காஷ்மீரில் மீண்டும் ஜனாதிபதி ஆட்சி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்...பிரகாஷ் ஜவடேகர் தகவல்

புதுடெல்லி: முத்தலாக் மசோதா மற்றும் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவை  தேர்தலில் மோடி தலைமையிலான பாஜ கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில், 17-வது  மக்களவை கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக, டெல்லியில் இன்று மத்திய அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம்  பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த  மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முத்தலாக் மசோதா மற்றும் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை இன்னும் 6  மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முத்தலாக் மசோதா:முத்தலாக் நடைமுறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி உச்ச நீதிமன்றம் தடை செய்தது. இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றும்படியும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி, மத்திய அரசு முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் ஏற்கனவே  நிறைவேற்றியது. மாநிலங்களவையில் அரசுக்கு போதிய பலம் இல்லதாததால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், கடந்த செப்டம்பரில்  முத்தலாக் தடை சட்டத்துக்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.இதை 6 மாதங்களில் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சிகள் கூறிய சில திருத்தங்களையும் முத்தலாக் மசோதாவில்  சேர்க்கப்பட்டன. ஜாமீன் பெறுவதற்கான பிரிவும் சேர்க்கப்பட்டன. திருத்தங்களுடன் கூடிய முத்தலாக் மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும்  மீறி மக்களவையில் கடந்த டிசம்பர் 27ம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த டிசம்பர் 31-ம் தேதி தாக்கல் செய்து விவாதம்  நடத்தலாம் என்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை  ஒத்திவைக்கப்பட்டது. மசோதாவும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா  அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த பாரதிய ஜனதா கட்சி, அந்த அரசுக்கான  தனது ஆதரவை கடந்த வருடம் ஜூன் 19-ம் தேதி விலக்கிக்கொள்வதாக அறிவித்தது. பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள சூழ்நிலையில்  முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி அன்றை பதவி விலகினார்.இதனையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபை முடக்கப்பட்டு கடந்த வருடம் ஜூன்  மாதம் ஆளுநர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.தொடர்ந்து ஆறு மாதங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலில் இருந்தது. ஆளுநர் ஆட்சி டிசம்பர் 19 நிறைவடைந்த நிலையில், மீண்டும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மாநிலத்தின் ஆளுநர் சத்யபால்  மாலிக் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்று மீண்டும் 6 மாதங்களுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை  அமல்படுத்தப்பட்டது. இ்ந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நிறைவடையவுள்ள நிலையில், மீண்டும் ஜனாதிபதி ஆட்சிக்கு  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை