மீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி: வரும் 30-ம் தேதி வானொலியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
மீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி: வரும் 30ம் தேதி வானொலியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் வானொலியில் பிரதமர் மோடி உரையாடும் மன் கி பாத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாடும் ‘மன் கி பாத்’ என்ற  நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி ஏற்பட்டு செய்திருந்தார். இந்தியாவின் பெரும்பான்மையாக 90% மக்களிடம் செல்லும்படியான ஊடகம் வானொலி  என்பதால் தொலைக்காட்சியை தவிர்த்து வானொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. அகில இந்திய வானொலி  மூலமாக முதல் முறையாக 2014 விஜயதசமியன்று (அக்டோபர் 03) தனது முதல் உரையை பிரதமர் தொடங்கினார்.அப்போது முதல் மாதம் ஒரு முறை என கடந்த பிப்ரவரி வரை தொடர்ந்து 53 மன் கி பாத் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் நாடாளுமன்ற  தேர்தலுக்காக மன் கி பாத் நிகழ்ச்சிக்கு தடை ஏற்பட்டதாக கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கடைசி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது உரையாற்றிய  பிரதமர் மோடி, புல்வாமா தீவிரவாத தாக்குதலில் நமது துணிச்சல் மிகுந்த வீரர்களின் உயிர்த் தியாகத்தை எண்ணி நாட்டு மக்கள் மிகுந்த  வலியோடும், கோபத்தோடும் இருக்கிறார்கள். இத்தாக்குதல் நடந்த 100 மணி நேரத்திலேயே நமது ராணுவம் விரைந்து செயல்பட்டு பதிலடி  தந்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான் என்றார்.  ஜனநாயகத்தில் தேர்தல் மிகப்பெரிய திருவிழா. அடுத்த இரு மாதங்கள், நாங்கள் தேர்தலில் பரபரப்பாக இயங்குவோம். நானும் வேட்பாளராகப்  போட்டியிடுகிறேன். ஜனநாயகத்தின் ஆரோக்கியமான பாரம்பரியங்களை மதித்து, அடுத்த மன்கி பாத் நிகழ்ச்சி மே மாதம் கடைசி வாரத்தில்  ஒளிபரப்பாகும் என பிரதமர் மோடி பேசினார். இந்நிலையில் நடத்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களில் வெற்றிப்பெற்றதையடுத்து இரண்டாவது முறையாக  பிரதமராக மீண்டு நரேந்திர மோடி பொறுப்பேற்றார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. வரும்  30-ம் தேதி பிரதமர் உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1800-11-7800 என்ற கட்டணமில்லா  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது எண்ணங்கள், கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் என கோரப்பட்டுள்ளது.  பிரதமரின் வானொலி நிகழ்ச்சியில் 2015 குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் ஓபாமாவும்  கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை