கொல்கத்தாவில் நடந்த பா.ஜ.க. பேரணியில் வன்முறை: போலீஸ் மீது கற்கள், கண்ணாடி பாட்டல்கள் வீச்சு

தினகரன்  தினகரன்
கொல்கத்தாவில் நடந்த பா.ஜ.க. பேரணியில் வன்முறை: போலீஸ் மீது கற்கள், கண்ணாடி பாட்டல்கள் வீச்சு

மேற்கு வங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. மேற்கொண்ட பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் கொல்கத்தாவில் பதற்றம் நிலவுகிறது. தேர்தல் வன்முறைகள் மற்றும் கட்சி தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் பா.ஜ.க. சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. பேரணி போவ்பசார் என்ற இடத்தை கடந்தபோது சிலர் காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்கினர். இதையடுத்து பேரணியாக சென்றவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் தண்ணீரை பீய்ச்சடித்தும், கண்ணீர்ப் புகை கொண்டு வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு  பா.ஜ.க. தொண்டர்கள் மீது வேண்டும் என்றே வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பதாக அந்த கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியினரின் பேரணி வன்முறையாக மாறியதால் கொல்கத்தாவில் பதற்றம் நீடித்து வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக முக்கிய சாலைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை