வாயு புயல்: நிவாரணப்பணிகளில் ஈடுபட தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
வாயு புயல்: நிவாரணப்பணிகளில் ஈடுபட தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்

லக்னோ: குஜராத்தில் புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் மீட்பு பணி உள்ளிட்ட உதவிகளில் ஈடுபட வேண்டும் என ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்மேற்கு பருவ மழை காரணமாக அரபிக்கடலில் உருவான வாயு புயல் நாளை குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மாகுவா பகுதியில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வாயு புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் சாதாரண வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் விவசாய பயிர்களும், சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு மீட்பு பணிக்காக சென்றுள்ளனர். இத்துடன் கடற்படை மற்றும் விமானப்படையினரும் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அரபிக்கடலில் உருவாகி இருக்கும் வாயு புயல் தீவிர புயலாக வலுப்பெற்றிருக்கும் நிலையில் புயல் தாக்கும் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள தயாராக இருக்குமாறு குஜராத் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். குஜராத் கடற்கரை பகுதியில் வாயு புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வாயு புயல் காரணமாக கோவா மற்றும் கோங்கன் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை