பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைப்பு: தேசிய தலைவராக அமித் ஷா நியமனம்

தினகரன்  தினகரன்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைப்பு: தேசிய தலைவராக அமித் ஷா நியமனம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சமீபத்தில் நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. மோடி மீண்டும் பிரதமராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் வரும் 17ம் தேதி 17வது மக்களவை கூட்டத்தொடர் துவங்குகிறது. ஜூன் 17ம் தேதி துவங்கும் கூட்டத்தொடர் ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு நாட்களில் புதிய எம்பிக்கள் பதவியேற்கிறார்கள். ஜூன் 19ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.யான, வீரேந்திர குமார் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்களவை பாஜக குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய தலைவராக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும், மக்களவை பாஜக குழு துணைத் தலைவராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாநிலங்களவை பாஜக குழு தலைவராக தாவர் சந்த் கெலாட் மற்றும், துணைத்தலைவராக மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அரசு கொறடாவாக பிரகலாத் ஜோஷி, அரசு துணை கொறடாவாக மக்களவைக்கு அர்ஜுன் ராம் மேக்வால், மாநிலங்களவைக்கு முரளிதரன் என பாஜக கட்சியை சேர்ந்த 50 எம்பிக்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மூலக்கதை