சரண்யா சசிக்கு 7வது ஆபரேஷன்: நிதி உதவி செய்ய கோரிக்கை

தினமலர்  தினமலர்
சரண்யா சசிக்கு 7வது ஆபரேஷன்: நிதி உதவி செய்ய கோரிக்கை

பிரபல மலையாள நடிகை சரண்யா சசி. சோட்டா மும்பை, தப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிபினலு உள்பட பல படங்களில் நடித்தார். தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தார். சினிமா வாய்ப்பு குறைந்ததும், தமிழ், மலையாளத்தில் சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவுக்கு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதனை டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அகற்றினர். இதே பிரச்சினைக்கு இதுவரை 6 முறை அவருக்கு ஆபரேஷன் நடந்துள்ளது. கட்டி அகற்றப்பட்டாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்து விடுகிற அபூர்வ பிரச்சினை அவருக்கு. இப்போது மீண்டும் மூளை கட்டி வளர்ந்து பெரும் அவஸ்தைபட்டு வருகிறார். இந்த முறை நவீன முறையில் பெரிய அளவில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் தீர்மானித்துள்ளனர். இது உயிருக்கு ஆபத்தான ஆபரேஷன் என்றாலும் வேறு வழியில்லை.

அதே நேரத்தில் ஆபரேஷனுககு பெரும் தொகை தேவைப்படுகிறது. இதனால் சரண்யாவின் நண்பர்கள் இணைந்து சரண்யா பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நிதி உதவி கேட்டுள்ளனர். அதோடு சரண்யாவின் வங்கி கணக்கு விபரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

மூலக்கதை