கர்ணனுக்கு உயிர் கொடுப்பாரா விக்ரம்..? ; விரக்தியில் இயக்குனர்

தினமலர்  தினமலர்
கர்ணனுக்கு உயிர் கொடுப்பாரா விக்ரம்..? ; விரக்தியில் இயக்குனர்

மலையாளத்தில் கடந்த 2015ல் பிரித்விராஜை வைத்து 'என்னு நிண்டே மொய்தீன்' என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் ஆர்.எஸ்.விமல். அந்த படம் சூப்பர் ஹிட்டாகவே அதைத்தொடர்ந்து மகாபாரத கர்ணனை மையமாக வைத்து சரித்திர படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஆர்.எஸ்.விமல். இதில் முதலில் பிரித்திவிராஜ் கதாநாயகனாக நடிப்பதாக இருந்து பர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியானது. ஆனால் சில காரணங்களால் பிரித்விராஜ் அதிலிருந்து ஒதுங்கி கொள்ள அதன் பிறகு இந்த கதையை விக்ரமிடம் கொண்டு சென்றார் விமல்.

விக்ரம் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்க ஹிந்தி, மலையாளம், தமிழ் என மும்மொழி படமாக இந்தப் படம் உருவாகும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆன நிலையிலும் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் அப்படியே இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட விக்ரம் இந்த படக்குழுவினருடன் படப்பிடிப்பு பற்றி டிஸ்கஷன் செய்ததாக செய்திகள் வந்தது.

ஆனால் அந்த சமயத்தில்தான் விக்ரமின் மகன் துருவ், பாலா டைரக்ஷனில் நடித்த வர்மா படம் குறித்த சர்ச்சை வெடித்து விக்ரமின் கவனம் எல்லாம் அந்தப் பக்கம் திசை திரும்பியது. தற்போது தனது மகன் துருவ் நடித்துவரும் ஆதித்ய வர்மா படத்தில் மீதுதான் விக்ரமின் முழு கவனமும் இருக்கிறதாம். அதனால் மஹாவீர் கர்ணா படத்தை தற்போதைக்கு அவர் ஒத்தி வைத்து விட்டார் என்றே சொல்லப்படுகிறது.

ஏற்கனவே தனது முதல் படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தனது இரண்டாவது படமாக கர்ணன் படத்தை தேர்ந்தெடுத்தது தவறா அல்லது அதில் விக்ரமை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தது தவறா என விரக்தியான நிலையில் புலம்பி வருகிறாராம் இயக்குனர் ஆர்.எஸ்.விமல்.

மூலக்கதை