இரவு நேர கொண்டாட்டங்களை தவிர்த்தது ஏன்?: நந்திதா

தினமலர்  தினமலர்
இரவு நேர கொண்டாட்டங்களை தவிர்த்தது ஏன்?: நந்திதா

அட்டக்கத்தி என்ற படத்தில் அறிமுகமானவர் தமிழ் நடிகை நந்திதா. எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, தேவி-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், அவருக்கு தமிழில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு பக்கம் ஒதுங்கி விட்டார். தெலுங்கு படங்களில் தற்போது தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

தெலுங்கு படங்களுக்காக நடக்கும் இரவு நேர கொண்டாட்டங்களில் தொடர்ச்சியாக நந்திதா கலந்து கொள்கிறார் என தெலுங்கில் செய்தி பரவி வருகின்றன. இந்நிலையில், அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

நல்ல கேரக்டர்கள் தொடர்ச்சியாக வரும் என எதிர்பார்த்து காத்திருந்தேன். எல்லா கேரக்டர்களுமே இயல்பான கேரக்டர்களாக இருந்தனவே தவிர, சவாலாகவோ; கிளாமராகவோ இல்லை. அதனால், தமிழில் தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்பு வந்தும், அதை நான் ஏற்கவில்லை.

அதே நேரம், தெலுங்கு படங்களில் எனக்கு கவர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. அங்கே, அதன்படியே நான் நடிக்கத் துவங்கினேன். நான் நடித்த படங்களும், தெலுங்கில் நன்கு ஓடுவதால், எனக்கு வாய்ப்புகளும் நிறைய வருகின்றன. அதனால், எனது கவனம் முழுவதும் தெலுங்கு பட உலகம் மீதுதான் இருக்கிறது.

இதற்கிடையில், நான் தொடர்ச்சியாக இரவு நேர கொண்டாட்டங்களுக்குச் செல்வதாக செய்தி பரப்புகின்றனர். தெலுங்கு பட உலகில் இரவு நேர கொண்டாட்டம் என்பது சகஜம்தான். ஒரே ஒரு முறை மட்டும் நான் இரவு நேர கொண்டாட்டத்துக்குச் சென்று விட்டேன். அங்கு நான் எதிர்பார்த்துப் போனதற்கு நேர் மாறாக எல்லாமே நடந்தது. எனக்குப் பிடிக்கவில்லை. அதனால், தொடர்ந்து இரவு கொண்டாட்டங்களுக்கு அழைப்பு வந்தும், நான் செல்லவில்லை.

அதோடு, இரவு கொண்டாட்டங்களில் வெகு நேரம் கலந்து கொண்டு விட்டு, வீட்டுக்கு அதிகாலையில் வந்தால், பின் தூக்கம்தான் வருகிறது. பட சூட்டிங்குகளுக்கு சென்று, முழுமையாக நடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சிக்கல்களால்தான் நான் இரவு நேரக் கொண்டாட்டத்தை தவித்தேன்.

இவ்வாறு நந்திதா கூறியிருக்கிறார்.

மூலக்கதை