‘வாயு’ புயல் நாளை அதிகாலை கரையை கடக்கிறது: குஜராத்தில் 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘வாயு’ புயல் நாளை அதிகாலை கரையை கடக்கிறது: குஜராத்தில் 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்

* உஷார் நிலையில் பேரிடர், ராணுவ மீட்புக் குழுக்கள்
* மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களுக்கும் எச்சரிக்கை

போர்பந்தர்: அரபிக் கடலில் உருவாகி உள்ள ‘வாயு’ புயலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத், டையூ  யூனியன் பிரதேசத்தில் 3 லட்சம் பேர் இன்று பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு  செல்லப்பட்டனர். மேலும், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘வாயு’ புயல் தீவிரமாகி குஜராத்தின் போர்பந்தர், மஹுவா பகுதியில் நாளை அதிகாலை (ஜூன் 13) கரையைக் கடக்கிறது. அப்போது மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், ஒரு சில இடங்களில் 135 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ராஜ்கோட், ஜாம் நகர், போர்பந்தர், துவாரகா, ஜூனாகத், ராஜ்கோட், பாவ் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால், அரபிக் கடலோர மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, கோவா கடலோரப் பகுதியில் மீனவர்கள் வரும் 15ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோவா மற்றும் கொங்கன் பகுதிகளிலும் அடுத்த 2 நாள்களுக்கு தொடர் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக, நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அப்போது, ‘வாயு’ புயல் குறித்த முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்க உத்தரவிடப்பட்டது. குஜராத் மற்றும் டையூவில் இன்று 3 லட்சம் பேரை, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல ஆணையிடப்பட்டதால், 70‌0 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

புயலில் மக்களவை பாதுகாக்க தேசியப் பேரிடர் மீட்புப்படையின் உதவியுடன் உள்ளூர் குழுக்களும் இணைந்து செயல்படுகிறது. நேற்றிரவு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து குஜராத் மாநிலத்தின் ஜாம்நகருக்கு விமானம் மூலம் மீட்புப் பொருட்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சென்றனர்.அதன்படி, தலா 45 பேர் கொண்ட 39 குழுக்களும், இந்திய ராணுவத்தின் 34 குழுக்களும் புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட உள்ளனர். முன்னதாக, பேரிடர் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள விஜயவாடாவிலிருந்து குஜராத்துக்கு வீரர்களை அழைத்துச் செல்ல, விமானப்படையின் சி 17 ரக விமானம் டெல்லியிலிருந்து வரவழைக்கப்பட்டது.

இதுகுறித்து, குஜராத் மாநில தலைமை செயலாளர் ஜே. என். சிங் கூறுகையில், ‘‘கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 2. 80 லட்சம் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண் குழுவினர் மற்றும் ராணுவ வீரர்களும் குஜராத் வந்துள்ளனர்.

இன்று மாலைக்குள் துவாரகா, சோம்நாத், சாசான், கட்ச் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், அங்கிருந்து முழுமையாக மக்கள் அப்புறப்படுத்தப்படுவர். புயல் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன’’என்றார்.


.

மூலக்கதை