2வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றபின் முதன்முதலாக இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
2வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றபின் முதன்முதலாக இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம்

* 17 புதுமுகங்கள் உட்பட 57 அமைச்சர்களுக்கு அழைப்பு
* 5 ஆண்டு திட்டம், 100 நாள் இலக்கு குறித்து ஆலோசனை
* நிறைவேற்ற முடியாத மசோதாக்கள் மீண்டும் அறிமுகம்

புதுடெல்லி: பிரதமராக மோடி, 2வது முறையாக பதவியேற்ற பின் முதன்முறையாக மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுவதால், 17 புதுமுகங்கள் உட்பட 57 அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், அடுத்த 5 ஆண்டு திட்டம், 100 நாளில் செயல்படுத்தும் திட்டத்திற்கான இலக்கு, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதாக்கள் நிறைவேற்றம் ஆகியன குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.

மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப்பின், பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு மே 31ல் நடைபெற்ற முதலாவது கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில், அனைத்து விவசாயிகளுக்கும், ஆண்டுக்கு ரூ. 6,000 வீதம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தும் பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தல் உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முன்னதாக மே 30ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு) என 17 புதுமுகங்கள் உட்பட 57 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.இதற்கிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடக்கிறது. 19ம் தேதி மக்களவைக்கு புதியதாக சபாநாயகர் தேர்வு நடக்கிறது.

இதற்கிடையே, 17 மற்றும் 18ம் தேதிகளில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜ எம்பி வீரேந்திர குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து ஜூலை 5ம் தேதி 2019 - 20ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, எதிர்க்கட்சிகள் தரப்பில் அந்தந்த கட்சிகளின் மக்களவை தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல், மற்ற கட்சிகளும் தங்களது தலைவர்களை அறிவித்துள்ளன.

இந்நிலையில், இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின்,

மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கும், அதை தொடர்ந்து முதன்முறையாக மாலை 5 மணிக்கு அனைத்து மத்திய அமைச்சர்களும் கலந்துகொள்ளும் அமைச்சரவை கூட்டம் ஆகியன நாடாளுமன்ற அனெக்ஸ் கட்டடத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், அரசின் அடுத்த 5 ஆண்டுகால செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் சேர்ப்பது குறித்தும், அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. முக்கியத் துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அப்பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து சில முடிவுகள் எடுக்கப்படும்.

17ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் இணை அமைச்சர்களின் முக்கியப் பங்கு குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புகள் குறித்தும் ஆலோசனைகள் அளிக்கப்படும். நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளை எதிர்கொள்ளும் விதம், நாடாளுமன்ற நடவடிக்கைகளை சுமுகமாக கையாளும் விதம் போன்றவை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவான ஆலோசனைகள் வழங்கப்படும்.இதற்காக, 17 புதுமுகங்கள் உட்பட 57 அமைச்சர்களுக்கும் முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களை பொறுத்தவரை, கடந்த 2014 அமைச்சரவையை காட்டிலும் கூடுதலாகவே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படாத சில மசோதாக்கள் உட்பட 10 முக்கிய மசோதாக்களை வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அனுமதி, இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அதன்படி, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவுக்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து அது தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது.

தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு மாநிலங்களவையில் மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அதன் மீதான விவாதம் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

இந்நிலையில், அந்த மசோதாவுக்கு அமைச்சரவை குழு அனுமதி அளிக்க தயாராக உள்ளதால், வரும் நாடாளுமன்றத் கூட்டத் தொடரிலேயே மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும். அதேபோல், முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் 28-12-2017ல் தாக்கல் செய்யப்பட்டது.

அங்கு சிறிய விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் மாநிலங்களவையில் முடங்கிப் போனது. இருப்பினும், ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அவசர சட்டமாக இருமுறை நீட்டிப்பும் செய்யப்பட்டது.

தற்போது அமலில் இருந்தாலும், மாநிலங்களவையில் மசோதா முடங்கிப் போனதால், மக்களவை தேர்தல் முடிந்ததும் புதியதாக மக்களவையில் மசோதாவை மறுபடியும் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையின்படி, மீண்டும் இம்மசோதாவை மத்திய அரசு தாகககல் செய்ய உள்ளது.

இதேபோல், கடந்த ஆட்சியின் போது நிறைவேற்றப்படாத மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதால், இரு அவைகளிலும் அமளி இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அமைச்சரவை ‘ஹைலைட்ஸ்’
* மாலை 4 மணிக்கு கேபினட், 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்
* 17 புதுமுகங்கள் உட்பட 57 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு
* 17ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடக்கம்; புதிய எம்பிக்கள் பதவியேற்பு
* 19ம் தேதி சபாநாயகர் தேர்வு
* ஜூலை 5ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்
* ஜூலை 26ம் ேததி கூட்டத்தொடர் முடிவு
* நிறைவேற்ற முடியாத மோட்டார் வாகன சட்டத் திருத்தம், முத்தலாக் போன்ற மசோதாக்கள் மீண்டும் அறிமுகம்
* புதியதாக அறிமுகம் செய்யப்படவுள்ள மசோதா குறித்து அனுமதி மற்றும் ஆலோசனை
* தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் நியமனம்

.

மூலக்கதை